முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், 1எம்டிபிமீதான பேங்க் நெகரா மலேசியா(பிஎன்எம்), மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), தலைமைக் கணக்காய்வாளர் ஆகிய முத்தரப்புகளின் அறிக்கைகளில் உள்ளது தமக்கு நன்றாகவே தெரியும் என்கிறார்.
ரிம2.6 பில்லியன் விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குற்றம் எதுவும் இழைக்கவில்லை என்று சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி அறிவித்தது பொய் என்பது தமக்குத் தெரியும் என்று கூறிய மகாதிர், அதனால்தான் திருக்குர்ஆன்மீது சத்தியம் செய்யும் துணிச்சல் உண்டா என்று அவருக்குச் சவால் விடுத்ததாகவும் சொன்னார்.
“எப்படி என்றால், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் கனி பட்டேல் அப்போதைய துணைப் பிரதமர் முகைதின் யாசினின் கவனத்துக்கு பிஎன்எம் அறிக்கையைக் கொண்டு சென்றிருக்கிறார். இப்போது பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவராகவுள்ள முகைதின், அவரது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட அறிக்கைகளின் உள்ளடக்கத்தை அடிக்கடி குறிப்பிடுவதுண்டு”, என மகாதிர் கூறினார்.
“என்னையும் உள்ளடக்கிய பெர்சத்து தலைமைத்துவம் அந்த அறிக்கைகளை விவாதித்துள்ளது. அதன்வழிதான் எனக்கும் தெரிய வந்தது”, என மகாதிர் அவரது வலைப்பதிவில் கூறினார்.
“அறிக்கையில் இருப்பது தெரியாமலிருந்தால் குர்ஆன்மீது சத்தியம் செய்யுமாறு அபாண்டிக்குச் சவால் விடுத்திருக்க மாட்டேன். எனக்குத் தெரியும் அபாண்டி பொய்யுரைத்தது. அதனால்தான் அந்த அறிக்கை அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின்கீழ் வைக்கப்பட்டது”, என்றாரவர்.