கிரேப்கார் மற்றும் உபர் மின் – போக்குவரத்துச் சேவையைச் சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடாக மலேசியா விளங்குகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் நான்சி ஷுக்ரி கூறியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில், நிலப் பொது போக்குவரத்து (திருத்தம்) 2017 மற்றும் வணிக வாகனங்கள் உரிமம் வழங்கும் சபை (திருத்தம்) 2017 ஆகியவை நிறைவேற்றப்பட்டதன் வழி, மின்-போக்குவரத்து சேவைகளைக் கண்காணிக்க இனி வாய்ப்புள்ளது.
“மின்-போக்குவரத்து சேவை கண்காணிக்கப்படுவது இதுவே முதல் தடவை, வேறு எந்த நாட்டிலும் இந்த மின்-போக்குவரத்து சேவை கண்காணிப்பு நடைமுறையில் இல்லை; அதனால் எல்லாருடைய பார்வையும் இப்போது நம்மேல் விழுந்துள்ளது”, என நாடாளுமன்ற அமர்வுக்குப் பின் நான்சி நிருபர்களிடம் கூறினார்.
இந்தச் சட்டமசோதாவின் கீழ், டெக்சி ஓட்டுநர்களுக்கு விதிக்கப்படும் வாகன ஆய்வு, காப்பீட்டு பாதுகாப்பு, ஓட்டுநர் அட்டை என அனைத்து விதிமுறைகளும் இவர்களுக்கும் விதிக்கப்படுமென அவர் மேலும் கூறினார்.
மின்சேவை ஆப்பரேட்டர்கள் அல்லது பயணிகளின் புகார்கள் நேரிடையாக நிலப் பொது போக்குவரத்து அல்லது வணிக வாகனங்கள் உரிமம் வழங்கும் சபையிடம் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பொது போக்குவரத்து சேவைகளில் சட்டத்திருத்தம், புதிய விதிமுறைகளோடு மின் – போக்குவரத்து அறிமுகம் எல்லாம் சரியாகப்பட்டாலும், ஏற்கனவே இருக்கும் வாடகைக் கார் ஓட்டுநர்களின் பிரச்சனைகளைக் களைய அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளும் என்னென்ன திட்டங்கள் வகுத்துள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
பல வாடகைக் கார் ஓட்டுநர்கள் சொந்த பெர்மிட்டுகள் இன்றி அவஸ்தைப்படுவதும், தினமும் சம்பாதிக்கும் பணத்தில் பாதியைப் பெர்மிட் வாடகைக்கும் வாடகை வண்டிக்கும் செலுத்துவதும் இன்று வாடிக்கையாகிப் போன உண்மை. பல சமயங்களில் பணமில்லாத பட்சத்தில் ‘ஆலோங்கி’டம் மாட்டிக்கொண்டு அல்லல்படுவதும் இவர்களின் வழக்கமான வாழ்க்கையாகிப் போனது.
கூடுதல் பணம் சம்பாதிக்க , கடந்த பட்ஜெட்டில் ஆலோசனை வழங்கிய நம் பிரதமர், இந்த வாடகைக் காரோட்டிகளின் அடிப்படை சம்பாத்தியத்தைக் கருத்தில் கொள்ளாமல் விட்டது துரதிஸ்டமே.