பார்டி ரக்யாட் மலேசியா (பிஆர்எம்) அடுத்த தேர்தலில் பிகேஆர் வசமுள்ள மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறது.
அதன் நோக்கத்தைக் குறைகூறியுள்ள விமர்சகர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அதன் தலைவர் ரொஹானா அரிப்பின், “போட்டியிடுவது எங்களின் ஜனநாயக உரிமை…..அந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம்”, என்கிறார்.
“இதன் தொடர்பில் மாற்றரசுக் கட்சி பேச்சு நடத்த விரும்பவில்லை என்றால் அது அவர்களின் பிரச்னை”, என்று ரொஹானா இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
மாற்றரசுக் கட்சி “அரசாங்கம் செய்வதுபோல்” தங்களை அடக்கி ஒடுக்கிவைக்க முயலக்கூடாது என்றவர் கேட்டுக்கொண்டார்.
என்றாலும் மும்முனைப் போட்டியை உருவாக்க தம் கட்சி விரும்பவில்லை என்றும் அதனால் பக்காத்தானுடன் “பேச்சு நடத்தவே” விரும்புவதாகவும் அவர் சொன்னார்.
பிகேஆரின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ரொஹானா, அடுத்த பொதுத் தேர்தலில் தாங்கள் பினாங்கில் பாலிக் பூலாவிலும் சிலாங்கூரில் செலாயாங், பெட்டாலிங் ஜெயா செலாத்தான் ஆகிய தொகுதிகளிலும் போட்டியிட எண்ணியிருப்பதாக நேற்றுக் கூறியிருந்தார்.
அத்திட்டம் இணையச் செய்தித்தளங்களில் கடுமையாகக் குறைகூறப்பட்டதாக ரொஹானா கூறினார்.
அத்தொகுதிகளை இப்போது யுஸ்மாடி யூசும், வில்லியம் லியோங், ஹீ லோய் சியான் ஆகியோர் வைத்துள்ளனர்.
‘எங்களுக்கு இன்னும் ஆதரவு உள்ளது’
அம்மூன்று தொகுதிகளிலும் பிஆர்எம்முக்கு ஆதரவாளர்கள் பலர் உள்ளனர் என்று அதன் நிலைப்பாட்டை அவர் நியாயப்படுத்த முனைந்தார்.
“செலாயாங்கில் பிஆர்எம் வேட்பாளர் கோ சு யோங் போட்டியிட்டார்….நாங்கள் வெற்றிபெறவில்லை.ஆனாலும் மறுபடியும் போட்டியிட விரும்புகிறோம்”, என்றாரவர்.
பாலிக் பூலாவில் பல ஆண்டுகளாக போட்டியிட்டு வருவதாகவும் பெட்டாலிங் ஜெயா செலாத்தானில் “நல்ல பணிகளை” நெடுங்காலமாக செய்து வருவதாகவும் அவர் சொன்னார்.
“222 நாடாளுமன்ற தொகுதிகளில் மூன்றைத்தானே கேட்கிறோம்.
“நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளின் பல்வேறு குரல்கள் ஒலிப்பதுதான் நன்றாக இருக்கும்”, என்றாரவர்.
இப்போதைய பிஆர்எம், 2003-இல் அக்கட்சியில் உள்ள மற்றவர்கள் பிகேரில் சேர்வதென முடிவுசெய்த பின்னரும் தனியே செயல்பட்டு வரும் ஓர் அணியாகும்.
ஆனால், பிகேஆர் தலைவர்களில் பலர், 1955-இல் விடுதலைப் போராளியும் ஒருகாலத்தில் எம்பியாக இருந்தவருமான அஹமட் போஸ்டமாம் அந்த இடச்சாரி கட்சியைத் தோற்றுவித்ததிலிருந்து அதில் இருந்துவருவோரில் பலர் உள்பட, பிஆர்எம் என்ற கட்சி இப்போது இல்லை என்றே கூறுகிறார்கள்.