துரோனோவில் தங்கமீன்கள் வளர்க்கும் 39 விவசாயிகள், தாங்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சனைக்குத் தீர்வு காண, இரண்டாவது முறையாக பேராக் முதல்வருக்கு மகஜர் வழங்கியுள்ளனர்.
பத்துகாஜா தொகுதியில் உள்ள துரோனோ, கம்போங் பாலி எனும் கிராமத்தின் அருகிலுள்ள அரசு நிலத்தில், 1980-ஆம் ஆண்டு முதல், தங்கமீன்கள் வளர்த்து வரும் இவ்விவசாயிகளின் நிலப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என 2013-ல், பேராக் மாநில சட்டமன்ற பேரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென, அவர்கள் தங்கள் மகஜரில் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று காலை, மாநில முதல்வர் ஜம்ரி அப்துல் காதீரின் சிறப்பு அதிகாரி புவான் அனிதா ஹசிமிடம் அம்மகஜர் வழங்கப்பட்டது.
1985-ம் ஆண்டு முதல், தங்களின் சொந்த முதலீட்டில் அந்நிலத்தை மேம்படுத்தி, பல வகையான அழகு தங்க மீன்களை வளர்த்து வரும் இந்த விவசாயிகளுக்கு, மத்திய மற்றும் மாநில மீன் வளர்ப்பு இலாகாகள் பல வகையிலான பயிற்சிகளும் ஆலோசனைகளும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர் என அவ்விவசாயிகளின் பேச்சாளர் குணசேகரன் தெரிவித்தார். துவக்க காலக்கட்டத்தில், இவ்விடத்திலிருந்து ஒன்று முதல் இரண்டு மில்லியன் வரையிலான தங்க அழகு மீன்கள் உற்பத்திசெய்யப்பட்டு, நாடு முழுவதும் விநியோகம் செய்து வந்துள்ளதையும் குணசேகரன் நினைவு கூர்ந்தார்.
இதனைக் கருத்தில் கொண்டுதான், 2007-ஆம் ஆண்டில், அப்போதைய பேராக் மாநில முதல்வரான தாஜோல் ரோஸ்லி அங்கு வருகையளித்து, இவ்விடத்தை விவசாயிகளுக்கே கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். அதற்கான ஆதாரங்கள் மற்றும் மீன் வளர்ப்பு இலாகாகள் வழங்கிய ஊக்குவிப்பு சான்றிதழ்களை மேற்கோள்காட்டி, மந்திரி பெசாரின் அதிகாரியிடம் குணசேகரன் விளக்கமளித்தார்.
அதன் தொடர்பாக, 2013-ல் நடைபெற்ற பேராக் மாநில சட்டமன்ற பேரவைக் கூட்டத்தில், தற்போதைய மந்திரி பெசார் டாக்டர் ஜம்ரி அப்துல் காதீர், இவ்விவசாயிகள் மீன் வளர்க்கும் இடத்தில் உள்ள 162 ஏக்கர் அரசு நிலத்தினை, அவர்களுக்கே ஒதுக்கி தருவதற்காக மூன்று வகையான பரிந்துரைகளை மாநில ஆட்சிக்குழு முடிவெடுத்திருப்பதாகவும் பேராக் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்துள்ள அறிக்கையினையும் சுட்டிக்காட்டியதோடு; ஏன் இன்னும் இந்தக் காலதாமதம் என அம்மகஜரில் கேள்வி எழுப்பியுள்ளதாக வழக்கறிஞருமான குணசேகரன் குறிப்பிட்டார்.
மேலும், அவர்கள் விவசாயம் செய்துவரும் நிலத்தின் ஒரு பகுதியின் நில உரிமம் வேறுசில நபர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதையும், அவர்களில் பலர் அந்நிலத்தை ஒரு கணிசமான தொகைக்கு விற்றிருப்பதையும், அதனால் ஏற்பட்டுவரும் தொல்லைகளையும் அம்மகஜரில் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாமல், மாநில அரசு வாக்குறுதி அளித்ததுபோல் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, தங்கமீன்கள் வளர்க்கும் விவசாயிகளின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என குணசேகரன் கேட்டுக்கொண்டார்.
மாநில மந்திரி பெசார் அலுவலக வளாகத்தில் ஒன்றுகூடிய பாதிக்கப்பட்ட மீன் வளர்ப்பாளர்களுக்கு ஆதரவாக பி.எஸ்.எம். கட்சியின் தேசியத் துணைத் தலைவர் மு.சரஸ்வதியும் உடன் வந்திருந்தார்.