மலேசிய மனித உரிமை ஆணைய (சுஹாகாம்) முன்னாள் தலைவர் அபு தாலிப் ஒத்மான், அந்த ஆணையத்துக்கு அமலாக்க அதிகாரம் வழங்கப்படும் என்று நம்பத் தயராக இல்லை.
ஏனென்றால் மனித உரிமைகள் என்கிறபோது அது தனிப்பட்ட ஒருவரின் உரிமைகளைக் குறிக்கிறது ஆனால், அரசாங்கம் சமுதாய உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது.
“மனித உரிமை ஆணையத்தின் அணுகுமுறையும் அரசாங்க அணுகுமுறையும் ஒன்றாக முடியாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியுள்ளது, மனித உரிமை ஆணையம் தனிப்பட்ட ஒருவரின் உரிமைக்கு மதிப்பளிக்கிறது.
“இந்நிலையில், மனித உரிமை ஆணையத்துக்கு அமலாக்க அதிகாரம் அளிக்கப்பட்டால் குழப்பம்தான் ஏற்படும்”, என அபு தாலிப் மலேசியாகினியிடம் ஒரு நேர்காணலின்போது கூறினார்.
அப்படி என்றால் சுஹாகாமுக்கு அமலாக்க அதிகாரம் கொடுக்கப்படுவதில் அவருக்கு உடன்பாடு இல்லையா?
“அப்படிச் சொல்ல மாட்டேன். சுஹாகாம் முன்வைக்கும் பரிந்துரைகளுக்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றுதான் சொல்ல வருகிறேன்”, என்றாரவர்.
நாட்டின் சட்டத்துறைத் தலைவராக (ஏஜி) 13 ஆண்டுகள் பணியாற்றிய அபு தாலிப், 2002-இலிருந்து 2010வரை சுஹாகாம் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆணையம் பல்லில்லா புலியாக இருப்பதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான்.
அமலாக்க அதிகாரம் இல்லை என்பதால் ஆணையம் அரசாங்கத்திடம் கொண்டு செல்வதெல்லாம் வெறும் பரிந்துரைகளாக மட்டுமே இருக்கும்.
“நாங்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(ஐஎஸ்ஏ)த்தை நீக்கும்படி வலுவாக பரிந்துரைத்தபோது கடுமையாகக் குறைகூறப்பட்டது. என்னையும் கடிந்து கொண்டார்கள்.
“முடிவில் அரசாங்கமே ஐஎஸ்ஏ-யை இரத்துச் செய்தது. அதனால்தான் சொல்கிறேன், மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று”, என்றாரவர்.