மாணவி வளர்மதியை விடுதலை செய்க, ‘சிறகுகள்’ மாணவர் அமைப்பு கோரிக்கை

Slide1கடந்த ஜூலை 12-ல் கைது செய்யப்பட்ட, தமிழ்நாடு, பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ‘சிறகுகள்’ மாணவர் அமைப்பு கேட்டுகொண்டது. வளர்மதிக்கு ஆதரவாக, அமைதி ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று சற்றுமுன் சுங்கை சிப்புட்டில் நடந்தது.

சமூக விழிப்புணர்வுக்கான மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த வளர்மதி, ஏழை மக்கள் குறிப்பாக விவசாயிகள் மற்றும் சுற்றுச் சூழல் தொடர்பான பிரச்சனைகளுக்குக் குரல் கொடுத்து வந்தார். இதற்கு முன்பும், ஏழை எளியவர்கள் உரிமைக்காகப் போராடிய குற்றத்திற்காக வளர்மதி பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 12-ல், கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்து வந்த மாணவி வளர்மதி, நக்சலைட்டுகளுக்கு ஆள் சேர்க்கிறார் எனக்கூறி, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஓர் சமூக ஆர்வலரான வளர்மதியை, பொய்யான காரணங்கள் கூறி, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும், அவரின் கைது மனித உரிமைகளை மீறிய செயல் எனத் தாம் கருதுவதாகவும் ‘சிறகுகள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கேசவன் நம்மிடம் தெரிவித்தார்.

ஒருவரின் கருத்து சுதந்திரத்திற்கு யாரும் தடைபோடக் கூடாது. மேலும், இது சமூக அக்கறை Slide2கொண்டோருக்கு மிரட்டலாக விளங்குகிறது. எனவே, வளர்மதியை உடனே விடுதலை செய்ய வேண்டுமென கேசவன் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், “மாணவி வளர்மதி வன்முறையைத் தூண்டும் எந்தச் செயலையும் செய்யவில்லை. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தகவல்களைப் பரப்புவது தீவிரவாத செயல் அல்ல. ஆக, அவரைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது கண்டனத்துகுரியது,” எனக் கூறினார்.

“பல்கலைக்கழக மாணவர்கள் மக்கள் பிரச்சனையைப் பேசுவது வரவேற்கத்தக்கது. ஆக, அவர்களை இவ்வாறு தண்டிப்பது, ஜனநாயகத்துக்குப் புறம்பானது,” என அவர் மேலும் கருத்துரைத்தார்.