மகாதிரின் தனிப்பட்ட விவரங்களைத் ‘தப்பாகப் பயன்படுத்திய’ ஜாஹிட், என்ஆர்டி டி-ஜிமீது போலீஸ் புகார்

reportதுணைப்  பிரதமர்   அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  மீதும்   தேசியப்   பதிவுத்துறை(என்ஆர்டி)   தலைமை   இயக்குனரஜி(டி-ஜி)மீதும்   முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்  பற்றிய   தனிப்பட்ட    விவரங்களை  “துஷ்பிரயோகம்”    செய்ததாக   போலீசில்   புகார்  செய்யப்பட்டுள்ளது.

என்ஆர்டி  தலைமை  இயக்குனர்  தமக்கு    மகாதிரின்  அடையாள    அட்டையின்   பிரதி  ஒன்றை   அனுப்பியதாகவும்    அதில்     “Mahathir a/l Iskandar Kutty”   என்றிருப்பதாக  சொன்னதும்   தீய   நோக்கத்துடன்   கூறப்பட்டதாகும்    என்று     முன்னாள்  அம்னோ   தொகுதித்    தலைவர்   கைருடின்    அபு  ஹசான்  டாங்  வாங்கி   போலீஸ்   நிலையத்தில்  செய்த   போலீஸ்   புகாரில்   கூறினார்.

அப்படிச்  சொன்னதன்வழி   ஜாஹிட்டும்   என்ஆர்டி   தலைமை   இயக்குனரும்   தனிப்பட்டவர்  விவரப் பாதுகாப்புச்   சட்டத்தை   மீறிவிட்டதாக   கைருடின்  கூறினார்.

“அரசியல்  நோக்கத்துக்காக   தனிப்பட்ட    விவரங்களைத்   துணைப்  பிரதமரும்   என்ஆர்டி   தலைமை   இயக்குனரும்   தவறாக  பயன்படுத்திக்   கொண்டிருக்கிறார்கள்”,  என்றாரவர்.

அதன்  தொடர்பில்   வெளியிட்ட   பத்திரிகை   அறிக்கையில்,   ஜாஹிட்  “சிறுபிள்ளைத்தனமாக”    நடந்து   கொண்டிருக்கிறார்   என்றும்   கைருடின்   சாடினார்.

“மலேசியர்களின்   தனிப்பட்ட   விவரங்களை    வைத்துக்  கேலி  செய்யக்கூடாது.  அவற்றை,  பகிரங்கமாக,   அதுவும்   குறிப்பாக    அரசியல்    கூட்டங்களில்    வெளிப்படுத்தவும்   கூடாது”,  என்றார்.