நஜிப் : 3.7 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளராக பதியவில்லை

najib14-வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், 3.7 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளராகப் பதியாமல் இருப்பதாக பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார். நாட்டின் எதிர்காலம் வாக்காளர்களின் கைகளில் இருப்பதால், உடனடியாக வாக்காளராகப் பதியும்படி நஜிப் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

“உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வாய்ப்பை மற்றவர்களுக்குக் கொடுத்துவிடாதீர்கள். அவர்களின் முடிவு உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவருக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்,” என நஜிப்ரசாக்.கோம் எனும் தனது வலைப்பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

மக்களின் குரல், அவர்கள் எதிர்காலத்தையும் அவர்களின் குழந்தைகள் மற்றும் நாட்டின் எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பிரதமர் தமது பதிவில் கூறியுள்ளார்.

இவ்வாண்டு மார்ச் 31 வரை, 21 வயதிற்கு மேற்பட்ட 3.7 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளர்களாகப் பதியாமல் இருப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையை மேற்கோளிட்டு, பிரதமர் இவ்வாறு தமது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

“கடந்த பொதுத் தேர்தலை விட, 14-வது பொதுத் தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். 13-வது பொதுத் தேர்தலில் 84.84 % அல்லது 11.2 மில்லியன் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்து உள்ளனர்,” என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

வாக்காளராகப் பதிய அதிக நேரம் செலவாகும் என்ற எண்ணத்தினாலேயே, பலர் பதிவுக்குச் செல்வதில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார். “வாக்காளராகப் பதிவு செய்ய 5 நிமிடங்கள் போதுமானது. அருகிலுள்ள அஞ்சலகம், தேர்தல் ஆணையம் அல்லது தேர்தல் அலுவலகங்களுக்கு உங்கள் அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள், சில நிமிடங்களில் உங்களை அங்குள்ள பணியாளர்கள் வாக்காளராகப் பதிந்துவிடுவர்,” என இன்னும் பதியாமல் இருக்கும் மலேசியர்களை அவர் வலியுறுத்தினார்.

“தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். மக்கள் தங்களது தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், அரசாங்கத்தை அமைப்பதற்கும் கிடைத்த ஜனநாயக செயல்முறை இது. எனவே, ஒவ்வொருவரும் தங்கள் கடமையை தவறாமல் செய்ய வேண்டும்”, எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.