பிகேஎன்எஸ் வாரியத்தில் அதிகமான அரசியல்வாதிகள், சுல்தான் எதிர்ப்பு

 

SultanSelangorசிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழக வாரியம் (பிகேஎன்எஸ்) அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தில் இருப்பதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரீஸ் ஷா கூறுகிறார்.

பிகேஎன்எஸ் வாரியம் சமநிலையுடையதாக இருக்க வேண்டும். தொழிலியர்களும் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுடைய கருத்துகளும் ஆலோசனைகளும் மேம்பாட்டிற்கு உதவியாக இருக்கும் என்று ஷா அலாமில் பிகேஎன்எஸ் அலுவலக தொடக்க நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய போது சுல்தான் கூறினார்.

பிகேஎன்எஸ்சின் பங்கு ஏழை மலாய்க்காரர்களுக்கு உதவுவதாகும் என்பதை பிகேஎன்எஸ் தலைமையத்துவத்தின் இளைய தலைமுறையினர் மறந்து விடக்கூடாது என்று சுல்தான் அவர்களுக்கு நினைவுறுத்தினார்.

பிகேஎன்எஸ் நிறுவப்பட்டதின் நோக்கம் குறைந்த வருமானம் பெறும் மலாய்க்காரர்கள் வசதியான மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளைப் பெறுவதற்கு உதவ வேண்டும் என்பதை நிர்ணயித்தவர் அன்றைய மந்திரி புசார் ஹருன் இட்ரீஸ் என்று சுல்தான் கூறினார்.

பிகேஎன்எஸ்சில் இருப்பவர்கள் மனப்பூர்வமாகவும் நேர்மையாகவும் அர்ப்பண உணர்வோடும் இலஞ்ச ஊழலற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

பிகேஎன்எஸ் பத்து வாரிய இயக்குனர்களில் நால்வர் அரசியல்வாதிகாளாக இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில், மந்திரி புசார் அஸ்மின் அலி, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இஸ்கந்தர் அப்துல் சாமாட், தெங் சாங் கிம் மற்றும் பிகேஆர் புக்கிட் கட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அகின் ஆகியோரும் கலந்துகொண்டனர்.