ஸாகிட்டின் வங்கிக் கணக்கில் ரிம230 மில்லியன்: எப்படி கிடைத்தது, கேட்கிறார் மகாதிர்

 

millionsDPMதுணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி அம்னோவின் இளைஞர் பிரிவுத் தலைவராக 1996 இல் நியமிக்கப்பட்ட போது அவரது சொத்து எவ்வளவு என்பதை அன்றையப் பிரதமர் மகாதிர் முகமட்டிடம் தாக்கல் செய்திருந்தார். அதில் அவரது சொத்தாக அவரது வங்கிக் கணக்கில் ரிம230 மில்லியன் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகவலை மகாதிர் அவரது வலைத்தளத்தில் இன்று பதிவு செய்துள்ளார்.

“அவரது வங்கிக் கணக்கில் இருக்கும் ரிம230 மில்லியன் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்று நான் கேட்டதற்கு, அவரது பதில் தெளிவாக இல்லை.

“அவருக்கு ஞாபகம் இருக்குமானால், இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து வந்தது என்பதை அவர் விளக்க வேண்டும்”, என்று மகாதிர் அவரது இன்றைய வலைப்பதிவில் கேட்டுள்ளார்.

மகாதிரின் இக்குற்றச்சாட்டிற்கு பதில் கூறுமாறு மலேசியாகினி ஸாகிட்டின் உதவியாளர் இப்ராகிம் யஹாயாவுடன் தொடர்பு கொண்டது. பதிலுக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறது.

நேற்று, மகாதிர் வெளியிட்டிருந்த ஒரு தகவலில் ஹமிடி துணைப் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், அவர் மகாதிரைச் சந்தித்து பிரதமர் நஜிப்பின் இடத்தை தாம் எடுத்துக்கொள்வதற்கு தமக்கு ஆதரவும் அனுதாபமும் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.