நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா தமது இரு கேள்விகளை நிராகரிக்க எடுத்த முடிவிற்காக அவர் மீது நீதி,மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் பிகேஆர் பெட்டாலிங் ஜெயா செலத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியான்.
இந்த வழக்கு இன்று காலை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற மக்களைவை செயலாளர் ரூஸ்மே ஹம்ஸாவும் ஒரு பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
“அவைத் தலைவர் கொடுத்த காரணங்கள் நியாயத்திற்கு ஒவ்வாததாக நான் கருதுகிறேன்.
“(கேல்விகளை நிராகரிப்பதற்கு) அவைத் தலைவர் எடுத்த முடிவிற்கு அவர் பதில் கூற வேண்டும் ஏனென்றால் அது முக்கியமான பொதுநலன் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்”, என்று ஹீ கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஹீயின் முதல் கேள்வி: 1எம்டிபி சம்பந்தப்பட்ட அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) சிவில் பறிமுதல் வழக்கிற்கு எதிராக மலேசியா முறையாக ஆட்சேபம் தெரிவித்ததா என்று பிரதமர் நஜிப்பிடம் கேட்டார்.
அவரது இரண்டாவது கேள்வி: வணிகர் ஜோ லோ இப்போது இருக்குமிடம் மற்றும் அவரது இரட்டை குடியுரிமை பற்றி உள்துறை அமைச்சரிடம் கேட்டார்.
கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் 1எம்டிபி சம்பந்தப்பட்ட 30 கேள்விகளை அவைத் தலைவர் பண்டிகார் நிராகரித்ததற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஹீயை வழக்குரைஞர்கள் என். சுரேந்திரன் மற்றும் லத்தீபா கோயா ஆகியோர் பிரதிநிதிக்கின்றனர்.