வேலையிழந்த தொழிலாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, வேலையிழப்பு காப்புறுதி திட்ட (இ.ஐ.எஸ்.) மசோதாவை விரைவுபடுத்த வேண்டுமென, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் ஜயிம் அச்சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இச்சட்ட மசோதாவை முதல் வாசிப்புக்குக் கொண்டுவந்த அமைச்சின் முயற்சியைப் பி.எஸ்.எம். பாராட்டியது. இருப்பினும், இச்சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படாவிட்டால், வேலையிழந்த தனியார் துறை ஊழியர்கள் நிதி சிக்கல்களை எதிர்கொள்வர் என இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் பி.எஸ்.எம். கூறியது.
“இரண்டு வாரங்களுக்கு முன்பு, வியட்நாமிற்கு இடம்பெயர்வதால் ஒரு தொழிற்சாலை திடீரென மூடப்பட்டது. இதில் 237 தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழந்தனர். இந்தத் தொழிலாளர்களுக்குப் புதிய வேலை கிடைக்கும்வரை, அவர்களுக்கு என்ன பாதுகாப்பு உண்டு? ஒருவேளை இ.ஐ.எஸ். அமலில் இருந்தால், இதுபோன்ற சிக்கலான சூழ்நிலையில், அது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்,” என அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அக்கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தலைமையில், இன்று காலை அமைச்சர் ரிச்சர்ட் ரியோட்டுக்கு ஒரு கோரிக்கை மனு கையளிக்கப்பட்டது.
அம்மனுவை அமைச்சின் பிரதான துணைச் செயலாளர், முகமட் ஹஜாஷி ஜூசோ, அமைச்சரின் சார்பில் பெற்றுக்கொண்டார்.
வேலையிழந்த தொழிலாளர்கள் அடுத்த வேலையில் அமரும்வரை, இ.ஐ.எஸ். அவர்களுக்கு நிதியுதவி வழங்கும். மேலும், அவர்களுக்குப் புதிய வேலை தேடுவதற்கான உதவி, தொழில் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் ஆகியவையும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
அடுத்த ஆண்டிலிருந்து, இ.ஐ.எஸ்.-உடன் தொடர்புடைய நிதி நலன்களை வழங்க, 70 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் ‘சமூக பாதுகாப்பு அமைப்பு’ ஒன்றை அரசாங்கம் உருவாக்குமென்று, கடந்த மே 1-ல், பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.