தலைமை நீதிபதியும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவரும் தீண்டத் தகாதவர்கள், மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் தீர்மானம்

 

Barapprovesமலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் (பார்) மலேசிய தலைம நீதிபதி முகமட் ரவுஸ் ஷரிப் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் சுல்கிப்ளி அஹமட் மகினுடின் ஆகியோரை அதன் சமூக நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

அவர்களிடமிருந்து வரும் சமூக அழைப்புகளையும் ஏற்க வேண்டாம் என்று மன்றத்தின் உறுப்பினர்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

மன்றம் (பார்) முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற அம்மன்றத்தின் சிறப்புப் பொதுக்கூட்டம் பெரும் ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டது.

“மன்றம் அதன் ஆட்சேபத்தின் அறிகுறியாக நீதிபரிபாலனதுறையிடமிருந்து சமூக அழைப்புகளை ஏற்றுக்கொள்வதில்லை என்றும் அவ்வாறே நாங்களும் அவர்களுக்கு எங்களுடைய சமூக நிகழ்ச்சிகளுக்கு அழைப்புகள் அளிப்பதில்லை என்றும் தீர்மானித்துள்ளது.

“ஆனால், அது நாங்கள் நீதிபரிபாலனத்துறையுடன் ஈடுபாடு கொண்டிருக்க மாட்டோம் என்று பொருள்படாது, இதனை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

“அதிகாரப்பூர்வமான விவகாரங்கள் அனைத்திலும் நாங்கள் தொடர்ந்து நீதிபரிபாலனதுறையுடன் ஈடுபாடு கொண்டிருப்போம்”, என்று வழக்குரைஞர்கள் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கீஸ் சிறப்புப் பொதுக்கூட்டத்திற்குப் பின்னர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மலேசிய வழக்குரைஞர்கள் மன்றத்தின் இச்சிறப்பு பொதுக்கூட்டம் முகமட் ராவுஸ் மற்றும் சுல்கிப்ளி ஆகியோர் “அப்பட்டமாக அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக” கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டது குறித்து விவாதிப்பதற்காக கூட்டப்பட்டது.