பகடிவதையைத் தெரிவிக்கத் தவறினால் கடுமையான நடவடிக்கை

Slide2பள்ளியில் நடக்கும் ஒழுக்கச் சீர்கேடுகள், குறிப்பாக  பகடிவதைகளை மறைக்க முற்படும் பள்ளி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு கூறியுள்ளது.

பள்ளியின் முதல்வர்கள் அல்லது தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் ஒழுக்கச் சீர்கேடுகள் ஏதேனும் நடந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டுமெனக் கல்வி அமைச்சின் இயக்குநர் டாக்டர் கீர் முகமட் யுசோப் கூறினார்.

“இவ்வாறு செய்வதால் பள்ளியின் நற்பெயருக்குக் கலங்கம் ஏற்பட்டுவிடாது, மாறாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க இது அவசியமாகிறது,” என்று அவர் கூறினார்.

அண்மையில், சபா குனாக் இடைநிலைப் பள்ளியில் ஒரு மாணவி, சக மாணவிகளால் பகடிவதைக்கு ஆளானது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

தற்போது அப்பிரச்சனை காவல்துறையின் பார்வையில் உள்ளது. காவல்துறை விசாரணை நடத்தி வருவதால், கல்வி அமைச்சு அதில் குறுக்கிட விரும்பவில்லை என்றும் அவர்  பெர்னாமா  செய்திகளிடம் கூறினார்.

“விசாரணையில் அது பகடிவதை என முடிவானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது அமைச்சு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். ஆனால், அவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படமாட்டார்கள், மாறாக அவர்களை ஹென்ரி கெர்னி பள்ளியில் சேர்க்க வாய்ப்புள்ளது,” என அவர் மேலும் விளக்கப்படுத்தினார்.