கட்கோ குடியேறிகள் பிரச்சனை: சுவாராம் ஐநா சபையில் புகார்

சிவன்நெகிரி செம்பிலான், கட்கோ குடியேறிகளுக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐக்கிய நாட்டு சபையின் உயர் ஆணையாளரிடம் சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) புகார் செய்துள்ளது.

கடந்த ஜூலை 18-ல், இப்புகார் செய்யப்பட்டதாகவும், ஐநா அதிகாரிகள் அப்புகார் குறித்து கருத்தும் தெரிவித்துவிட்டதாக சுவாராமின் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி தெரிவித்தார்.

“அவர்கள் இந்த வழக்கை எடுத்துகொள்வதாகக் கூறியுள்ளனர்”, என்று இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிவன் கூறினார். அவருடன் மலேசிய சோசலிசக் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வனும் இருந்தார்.

“மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்), அமலாக்க நேர்மை ஆணையம் (இ.எ.ஐ.சி) மற்றும் புக்கிட் அமான் எனப் பலதரப்பினரிடம் புகார் செய்தும், இதுவரை  எந்தவொரு தீர்வும் கிடைக்காதப் பட்சத்தில்; அம்மக்களின் உரிமையைப் பாதுகாக்க அனைத்துலக சமூகத்தின் உதவியை நாடவேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுவிட்டது”, என சிவன் மேலும் தெரிவித்தார்.