நேற்றிரவு முகம்மட் ரவுஸ் ஷரிப் நாட்டின் தலைமை நீதிபதியாக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
கோலாலும்பூர், இஸ்தானா நெகாராவில், பேரரசர் சுல்தான் ஐந்தாம் முகம்மட்டிடமிருந்து பதவி ஆவணங்களை அவர் பெற்றுக்கொண்டார்.
பதவியேற்பு நிகழ்வுக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட், முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சுல்கிப்ளி அஹ்மட் மகினுடின், மலாயா தலைமை நீதிபதி அஹமட் மாரோப், கூட்டரசு நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் லத்திபா முகம்மட் தஹார் ஆகியோர் வந்திருந்தனர்.
முகம்மட் ரவுஸ் கடந்த ஏப்ரல் முதல் நாளில் மலேசியாவின் 14வது தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். நீதிபதி அரிப்பின் ஜக்கரியா பணி ஓய்வு பெற்றதை அடுத்து அவர் அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார். நீதிபதிகளின் பணி ஓய்வு வயது 66.
முன்னதாக முகம்மட் ரவுஸ் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். அப்பதவியில் இருந்தபோது அவரது பணிக்காலம் பிப்ரவரி 4-இலிருந்து ஆகஸ்ட் 3வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் அவர் ஏப்ரல் முதல் நாள் புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
ஜூலை 7-இல், பிரதமர்துறையிலிருந்து வந்த ஓர் அறிக்கை, முகம்மட் ரவுஸ், ஆகஸ்ட் 3-இலிருந்து மேலும் மூன்றாண்டுகளுக்குக் கூட்டரசு நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக அமர்த்தப்பட்டிருப்பதால் அவர் அதே காலத்தில் தலைமை நீதிபதியாகவும் இருப்பார் என்று கூறிற்று.