வேலையிழப்பு காப்பீட்டுத் திட்டம் 2017 (இ.ஐ.எஸ்.) மசோதா விவாதத்தை அமைச்சரவை நேற்று ஒத்தி வைத்தது.
பங்குதாரர்களின் நலனையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது என, நேற்று அமைச்சரவைக் கூடியபோது, சில அமைச்சர்கள் கவலை தெரிவித்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன.
இ.ஐ.எஸ். மசோதாவின் இரண்டாம் வாசிப்பு, அக்டோபர் நாடாளுமன்ற அமர்வுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை இரண்டாம் நிதி அமைச்சர், ஜொஹாரி அப்துல் கானி உறுதிப்படுத்தினார்.
கடந்த ஆகஸ்ட் 1-ல், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதா, அடுத்த வாரம் விவாதத்திற்கு உரியதாக, இரண்டாம் நிலையில் அட்டவணை இடப்பட்டிருந்தது. பணிநீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், தொழிலாளர்களும் முதலாளிகளும் கட்டாய நிதி பங்களிப்புச் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அம்மசோதா முன்வைத்திருந்தது.
6.5 மில்லியன் தொழிலாளர்களிடமிருந்து, ஆண்டுக்கு 1.4 பில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்படும். ஆனால், அந்நிதியிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களே பயனடைய முடியும் என ஒருசில பங்குதாரர்கள் கவலை தெரிவித்ததாக ஜொஹாரி கூறினார்.
“அரசாங்கம் இத்திட்டத்தை அமல்படுத்தவே விரும்புகிறது, ஆனால், அதற்கு முன் அனைத்து தரப்பினரும், குறிப்பாக பங்குத்தாரர்கள், அத்திட்டத்தைப் புரிந்துகொண்டனரா என்பதை நாங்கள் உறுதிசெய்ய வேண்டும்”, என ஜொஹாரி விளக்கமளித்தார்.
பணி நீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கு உதவும் வகைசெய்யும், இந்தக் காப்பீட்டுத் திட்ட ஆலோசனையைப் பங்குதாரர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், அவர்களுக்குக் கூடுதல் தெளிவு தேவைபடுவதாக அவர் மேலும் கூறினார்.
தொழிலாளர்கள், முதலாளிகளைப் பிரதிநிதிக்கும் அரசு சாரா நிறுவனங்கள் உட்பட, பங்குதாரர்களுடனானப் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைக்க வீ கா சியோங், பால் லோ, ரிச்சர்ட் ரியோட் மற்றும் ஜொஹாரி ஆகிய நான்கு அமைச்சர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (எம்.இ.எப்.), மலேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எப்.எம்.எம்.), எஸ்.எம்.இ. கார்ப் மலேசியா மற்றும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்.டி.யு.சி.) போன்றோரையும் சந்திக்க புத்ரா ஜெயா விரும்புவதாக தெரிகிறது.
பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அம்மசோதாவில் மாற்றங்கள் செய்ய வேண்டிய சாத்தியங்கள் ஏற்படலாம் என்பதையும் அவர் மறுக்கவில்லை.
“மாற்றங்கள் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நாங்கள் அத்திட்டத்தை மாற்றி அமைப்போம். காரணம், நிறுவனம் திவாலாகி, இழப்பீடு ஏதுமின்றி பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி, இத்திட்டத்தின் வாயிலாக நிச்சயம் பயன்பெற வேண்டும்”, என ஜொஹாரி தெரிவித்துள்ளார்.
“அடுத்த வேலை கிடைக்கும் வரை, அவர்களுக்கு நாம் உதவ வேண்டும்”, என்றாரவர்.
தற்போது இத்திட்டம், அதிகபட்சமாக 6 மாதங்களுக்கு அவர்கள் இழப்பீட்டுத் தொகையை பெற வாய்ப்பளிக்கிறது.
இத்திட்ட அமைப்பு, தேசிய சமூக பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) மூலம் நிர்வகிக்கப்படும். 2018 ஜனவரி 1-ல், அமல்படுத்தப்பட்டு, 2019 தொடங்கி இழப்பீடு வழங்கப்படும் என முன்பு கூறப்பட்டது.