பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கிழக்குக் கரை இரயில் தொடர்பு (இசிஆர்எல்) திட்டதுக்காக சீன வங்கி ஒன்றிடமிருந்து எளிய நிபந்தனைகளில் ரிம55 பில்லியன் கடன்பெறும் அரசாங்கத்தின் முடிவைத் தற்காத்துப் பேசினார்.
அத்திட்டத்தை சைனா கம்முனிகேஷன்ஸ் கொன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி(சிசிசிசி)-யிடம் கொடுத்ததற்காகவும் அரசாங்கம் குறை கூறப்பட்டது.
அத்திட்டத்தை சிசிசிசி-யிடம்தான் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் சீன ஏற்றுமதி, இறக்குமதி வங்கியிடமிருந்து கடன் கிடைக்காது என்று மார்ச் மாதம் நிதி அமைச்சு கூறியிருந்தது.
அக்கடனை 20 ஆண்டுகளில் செலுத்த வேண்டும். ஏழாண்டு அவகாசமும் உண்டு.
இன்று கோலாலும்பூரில் ஒரு பொருளாதாரக் கருத்தரங்கில் கலந்துகொண்ட நஜிப் இசிஆர்எல் திட்டம் கிழக்குக் கரையின் மூன்று மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றார்.
“இத்திட்டம் கிழக்குக் கரை மாநிலங்களில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். அத்திட்டம் முடிவடைந்ததும் பகாங், திரெங்கானு, கிளந்தான் ஆகிய மூன்றின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்குக்கு ஒன்றிலிருந்து 1.5 விழுக்காடு கூடும்”, என்றாரவர்.