1எம்டிபி “சீரமைப்புத் திட்டங்கள்” குறித்து அருள் கண்ட கந்தசாமி தங்களுக்கும் விளக்கமளிக்க வேண்டும் என்று பக்கத்தான் ஹராபான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகின்றனர்.
நேற்று 1எம்டிபி தலைவரும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான அருள், பாஸ் மத்திய செயலவையுடன் வட்டமேசை கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருப்பதை அடுத்து ஹராபான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
இந்த வேண்டுகோளை முன்வைத்த பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, ஏற்கனவே கலந்துரையாடலுக்கும் விவாதத்துக்கும் அருளை அழைத்து அழைத்து சலித்துப் போனவர்.
“இரண்டு மூன்று முறை கேட்டுப் பார்த்தோம். அவர் மறுத்து விட்டார். ஆனால், பாஸ் அழைத்ததும் சென்று விட்டார். பாஸிடம் அப்படி என்ன கவர்ச்சியைக் கண்டார் என்பது தெரியவில்லை.
“பக்கத்தான் ஹராபான் சார்பாக, அருளை மீண்டும் ஒரு கூட்டத்துக்கு அழைக்கிறேன், அதில் அவர் விளக்கமளிக்கலாம், பக்கத்தான் தலைவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கலாம்”, என புவா இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
சில பக்கத்தான் ஹராபான் தலைவர்களுக்குக் குறிப்பாக பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா தலைவர் முகைதின் யாசின், அதன் அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் போன்றோருக்கு “கேட்பதற்குக் கேள்விகள் நிறைய இருக்கும்”, என்றாரவர்.