உலகம் உன்னை திருடன் என்கிறது, நீ புன்னகை செய்கிறாய்: அவமானம் என்கிறார் மகாதிர்

 

Mregretsஅவமான உணர்வு என்பதெல்லாம் பெரும்பாலான நமது அரசாங்க அதிகாரிகளிடம் இப்போதெல்லாம் கிடையாது என்று முன்னாள் பிரதமர் மகாதிர் வருத்தப்பட்டுக் கொண்டார்.

அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. பேராசையால் ஆட்கொள்ளப்பட்ட இவர்கள் நன்னெறிகளை அடகுவைத்து விட்டனர் என்று அவர்களை மகாதிர் இடித்துரைத்தார்.

இந்தப் பேர்வழிகள் குற்றச்சாட்டுகள் மற்றம் அவர்களது செயல்களின் விளைவுகள் பற்றி மனக்கலக்கம் அடைவதில்லை, வெகுமதி வந்து கொண்டிருந்தால் போதும்.

அவர்கள் திருடியது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களிடம் கடுகளவு அவமான உணர்வுகூட கிடையாது. அவர்கள் திருடினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டாலோ, திருடியது நிருப்பிக்கப்பட்டு விட்டாலே, அதைப் பற்றிய கவலையே இல்லை என்று மகாதிர் மேலும் கூறினார்.

“உலகம் அவர்களை திருடர்கள், ஊழல் பேர்வழிகள், பொய்யர்கள் என்று அழைக்கிறது – கவலை இல்லை. புன்னகை செய்து விடு.

“அவர்களின் செயல்களால், நாடு அவமானப்படுத்தப்படுகிறது – உலகின் 10 ஊழல் நாடுகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது – அதனாலென்ன, பரவாயில்லை”, என்று மகாதிர் இன்று பின்னேரத்தில் அவரது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மலேசியா ஒரு கொள்ளையர் நாடாகிக் கொண்டிருக்கிறது, அங்கே பிரதமர், அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் தோழர்கள் பொதுச் சொத்தை மோசடியாகக் கையாடல் செய்கின்றனர் என்று குற்றச்சாட்டு நிலவுகிறது என்று மகாதிர் மீண்டும் கூறுகிறார்.

ஆனால், பிரதமர் நஜிப் ரசாக் இவை எல்லாம் தம்மைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படும் சதித் திட்டம் என்கிறார்.