நூர் ஜஸ்லான் : யூ.என்.எச்.சி.ஆர். திட்டத்தினால், ‘ஆவிகளாக’ அலையும் வெளிநாட்டவர்கள்

Slide3அகதிகளுக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் (யூ.என்.எச்.சி.ஆர்.) சலுகைத் திட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி, நாட்டில் பல வெளிநாட்டினர் ‘ஆவிகளாக’ திரிவதைத் தடுக்க மலேசியா நோக்கம் கொண்டுள்ளது என உள்துறைத் துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகமட் கூறினார்.

அகதிகளும் புலம்பெயர்ந்த பலரும், தங்கள் சொந்த நாட்டின் அடையாளங்களை அழித்துவிட்டு, மலேசியாவிலேயே நீண்ட காலம் தங்க, யூ.என்.எச்.சி.ஆர்.–ல் பதிந்துகொள்கின்றனர்.

“நமது அமைப்பில் நாம் ‘ஆவிகளை’ வைத்துகொள்ள விரும்பவில்லை. இந்த முறையானது துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும். அதனால்தான், யூ.என்.எச்.சி.ஆர். திட்டத்தில் உள்ள ஓட்டைகளை நாம் அடைக்க வேண்டும்.”

“அதிகமான வெளிநாட்டினர் இங்கு வந்து தங்கள் அடையாளங்களை அழித்துவிட்டு, யூ.என்.எச்.சி.ஆர். திட்டத்தில் பதிந்துகொண்டு, மலேசியாவிலேயே நீண்ட காலம் தங்கிவிடுகின்றனர். இது சரியானது அல்ல,” 12345என்று நூர் ஜஸ்லான் மலாய் மேல் இணையப் பத்திரிக்கையிடம் தெரிவித்தார்.

போதுமான மனித உரிமை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதைவிட; புலம்பெயர்ந்தவர்களை ஆவணப்படுத்துவதிலேயே மலேசியா மிகுந்த அக்கறைகாட்டி வருகிறது எனும் ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கையில், பூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மனித உரிமைகளுக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க; புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பிராந்திய உடன்படிக்கையை ஏற்படுத்துமாறு அனைத்து தென்கிழக்காசிய அரசாங்கங்களையும் வலியுறுத்தினர்.

ஐ.நா. வேலைத்திட்டம், ஒரு சிறிய எண்ணிக்கையிலான அகதிகளுக்கும் புலம்பெயர்ந்தோர் பலருக்கும் இடமாற்றத் திட்டத்தை மட்டுமே சிறப்பாக வழங்குகிறது; மாறாக, அகதிகள் மற்றும் மனிதக் கடத்தல்களில் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் அடையாளம் காணப்படாமலேயே உள்ளனர் என நூர் ஜஸ்லான் குற்றம் சாட்டினார்.

பயோமெட்ரிக் அடையாள அமைப்பு முறையிலான ‘டிஜிட்டல் ஐடி’ வழி, அகதிகளை ஆவணப்படுத்த முடியும். இதன்வழி, குடியேறிகள் அல்லது ஆவணங்களை பொய்மைபடுத்த முயலுவோரிடமிருந்து, அகதிகளை வேறுபடுத்தி காட்ட முடியும் எனவும் அவர் மேலும் விளக்கப்படுத்தினார்.

மலேசியாவில் வாழும் இந்த வெளிநாட்டினருக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளைக் கவனித்துக்கொள்வதில், புத்ராஜெயா அக்கறை செலுத்த வேண்டுமென  பிலிப்பைன்ஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்மி டெ ஜீசஸ் கேட்டுக்கொண்டார்.

Slide1“அவர்களின் பயோமெட்ரிக் டிஜிட்டல் பதிவு, ஆவணப்படுத்துவதற்கான ஒரு திட்டம் மட்டுமே, இதனால் புலம்பெயர்ந்தோருக்குப் பலனேதும் இல்லை. உள்ளூர் மேம்பாட்டிற்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆற்றியப் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களின் சேவைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்,” என புத்ராஜெயாவைக் குறிப்பிட்டு, நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஜீசஸ் பேசினார்.

நாட்டில் தற்போது 150,000 –லிருந்து 160,000 அகதிகள் உள்ளதாகப் பதிவுகள் காட்டுவதாகக் கூறிய நூர் ஜஸ்லான், யூ.என்.எச்.சி.ஆர். தனது அகதிகளின் தரவுத்தளத்தைப் புத்ராஜெயாவுடன் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டது என்றும் முன்னர் கூறியிருந்தார்.

நாட்டில் அகதிகளாக மீள்குடியேற விரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அகதிகள் அடையாள அட்டைகள், சட்டவிரோதமாக விற்கப்பட்டன என்று சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகியிருந்தன.