மலேசியாவில் கொலைக்குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுத் தப்பியோடிய போலீஸ் அதிகாரியான சிருல் அஸ்ஹார் உமர் காலவரையறையின்றி ஆஸ்திரேலிய லாக்-அப்பிலேயே காலங் கழிக்க வேண்டியதுதான். வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
சிருல் பாதுகாப்பு விசாவுக்கு மனுச் செய்திருந்தார். அது கிடைத்தால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவிலேயே வசிக்கலாம். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்படும் என்று தேசிய நாளேடான தி ஆஸ்திரேலியன் கூறியது.
சிருல் 2014-இல் நாட்டுக்குள் நுழைவதற்குமுன் அரசியலற்ற குற்றச்செயல் ஒன்றைச் செய்தவர் என்பதால் அவரது மனு நிராகரிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக ஆஸ்திரேலிய குடிநுழைவு மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை ஏற்கனவே அவரிடம் முறைப்படி தெரிவித்து விட்டதாக அந்நாளேடு கூறிற்று.
“சாதகமற்ற தகவல்களே கிடைத்துள்ளன, அவை உங்கள் மனுவுக்கு ஆதரவாக இல்லை” என்பதைக் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் சிருலிடம் தெரியப்படுத்தி விட்டார்களாம்.
எனினும் ஆகஸ்ட் 14வரை அவருக்கு அவகாசம் இருக்கிறது. அதற்குள் அவர் அவரது விடுதலைக்கு ஆதரவாக தகவலை எதையும் வழங்க முடிந்தால் அவர் விடுவிக்கபடலாம்.
2009-இல் அல்டான்துன்யா கொலை வழக்கில் சிருல்மீதும் இன்னொரு போலீஸ் அதிரடிப் படையினரான அஸிலா ஹட்ரிமீதும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், 2013-இல் முறையீட்டு நீதிமன்றம் அவ்விருவரும் குற்றவாளிகள் அல்லர் என்று தீர்ப்பளித்து அவர்களை விடுதலை செய்தது.
வழக்கு பின்னர் கூட்டரசு நீதிமன்றம் சென்றது. அது முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. ஆனால், சிருல் அதற்கு சில மாதங்களுக்கு முன்பே வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார்.