தலைமை நீதிபதி முகம்மட் ரவுஸ் ஷரிப்பின் பணிநீட்டிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கோரும் தீர்மானமொன்றை எதிரணியினர் இன்று தாக்கல் செய்ததாக பிகேஆர் கொறடா ஜொகாரி அப்துல் கூறினார் .
இதன் தொடர்பில் எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் நேற்று மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவுக்கு எதிரணி எம்பிகளின் கையொப்பங்கள் அடங்கிய ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
“பாஸ் எம்பிகள் உள்பட 60 பேரின் கையொப்பங்களை வாங்கி வைத்துள்ளோம். தலைமை நீதிபதியின் பணிநீட்டிப்பை எதிர்ப்பதே எங்களின் நோக்கம்”, என ஜொகாரி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கூட்டரசு அரசமைப்பின் பிரிவு 127-இன்கீழ் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அப்பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர்களில் நாலில் ஒரு பகுதியினரின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு நீதிபதியின் நடத்தை குறித்து நாடாளுமன்றம் விவாதிக்க முடியும் என்கிறது.
“அரசமைப்புப்படி நாங்கள் 55 அல்லது 56 கையெழுத்துகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
“பண்டிகாருக்கு நேற்றே கடிதம் எழுதியாகிவிட்டது. நாளைக்குள் அவர் பதிலளிக்க வேண்டும். அவர் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டால் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அது விவாதிக்கப்படும்”, என்று அந்த சுங்கை பட்டாணி எம்பி கூறினார்.