‘ஆண்பிள்ளை’களாக நடந்து கொள்ளுங்கள்: மதமாறியவர்களுக்கு அஸலினா அறிவுறுத்து

azalinaஇஸ்லாத்துக்கு   மதம்  மாறியவர்கள்  “ஆண்பிள்ளைகளாக”   நடந்துகொண்டு     தங்களின்  மணவாழ்க்கைக்கு   சிவில்    நீதிமன்றங்களிலேயே   சரியான  முடிவும்  காண  வேண்டும்   என   அமைச்சர்   ஒருவர்  கூறினார்.

சட்டச்  சீர்திருத்த(திருமணம்  மற்றும்  மணவிலக்கு)ச்  சட்டம் (எல்ஆர்ஏ)  இதற்கு   அனுமதிப்பதாக    பிரதமர்துறை   அமைச்சர்   அஸலினா  ஒத்மான்   கூறினார்.

எனவே,  அவர்கள்   தங்கள்   பொறுப்புகளைத்   தட்டிக்கழிக்க   இஸ்லாத்தை   ஒரு   காரணமாகக்  கூறக்  கூடாது  என்றாரவர்.

“அவர்கள்   விட்டு விலகி  வந்த  குடும்பம்   ஆதரவின்றி    தவிக்கும்  நிலை    கூடாது. எனக்குத்   திருமணம்   ஆகவில்லைதான்   ஆனால்,  இதை   நினைத்தால்  எனக்கும்   ஆத்திரம்   வருகிறது.

“அவர்கள்   வாழ்க்கைப்படி   கொடுக்காமல்    விலகி   ஓடுகிறார்கள்.  இஸ்லாத்தைத்  தவறாகப்  பயன்படுத்திக்கொள்கிறார்கள்.  உண்மையில்,  இஸ்லாம்  பொறுப்புடன்   செயல்படுவதைத்தான்   ஊக்குவிக்கிறது”,  என்றாரவர்.

அவர்கள்  ஆண்பிள்ளைகளாக   இருந்தால்   மணவிலக்கையும்  முறையாக    செய்ய  வேண்டும்.

“எதற்குப்  பயம்? ஏன்  ஷியாரியா  நீதிபதி  பின்னே  ஓடி  ஒளிய   வேண்டும்”,  என்று  அமைச்சர்  வினவினார்.