சிறையில் உள்ள பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று அவரின் மகள் நூருல் இஸ்ஸாவின் வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் வந்தபோது அவரின் ஆதரவாளர்கள் அவருக்குப் பிறந்த நாள் கொண்டாடினார்கள்.
நூருல் இஸ்ஸா, அமைச்சர் சப்ரி யாக்கூப்புக்கு எதிராக தொடுத்துள்ள அவதூறு வழக்கில் சாட்சியமளிக்க அன்வார் காலை மணி 10.30க்கு நீதிமன்றம் வந்தார். அவருக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்த அவரின் ஆதரவாளர்கள் பிறந்த நாள் வாழ்த்து கூறி அவரை வரவேற்றனர். பிறந்த நாள் வாழ்த்து கூறும் பதாதைகளையும் வைத்திருந்தனர்.
உற்சாகத்துடன் காணப்பட்ட அன்வார், தம் ஆதரவாளர்களுடன் கைகுலுக்கினார். வந்திருந்த தேசிய இலக்கியவாதி ஏ.அப்துல் சமாட்டிடம் , “உங்கள் கேக் கிடைத்தது, நன்றி”, என்றார்.
“40வது வயதுக்குப் பிறகு நான் (பிறந்த நாள்) கொண்டாடுவதை நிறுத்தி விட்டேன்”, என்று சொன்னார்.
பிறகு அவரே, “என் உண்மையான வயதைச் சொல்லப்போவதில்லை, நிறைய இளம்பெண்கள் இருக்கிறார்கள்”, என்று கிண்டலடித்தார்.
அதற்கு அவரின் ஆதரவாளர் ஒருவர் “நீங்கள் சொல்லாவிட்டால் என்ன, அது ஊர் அறிந்த இரகசியமாயுற்றே”, என்றார். இன்னொருவர் குறுக்கிட்டு புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும்வரை அன்வாருக்கு மனத்தளவில் வயது 40தான் என்றார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்வார் அவர்களே.