தனது ஆலோசனையின் கீழ் இயங்கும் ‘பெர்மாத்தா நெகாரா’ திட்டத்திற்குக் கூடுதல் நிதியுதவி எதனையும், இதுவரை அரசாங்கத்திடம் தாம் கேட்டதில்லை என ரோஸ்மா மன்சூர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது போல், பெர்மாத்தாவிற்குப் பட்ஜெட்டில் கூடுதல் ஒதுக்கீட்டை தாம் பிரதமரும், நிதி அமைச்சருமான நஜிப் ரசாக்கிடம் கேட்டதில்லை என பிரதமரின் துணைவியுமான ரோஸ்மா கூறினார்.
அரசாங்கத்திடம் பெர்மாத்தாவுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கச் சொல்லி தான் கேட்டதில்லை, ஆனால், மக்கள் விரும்புவது போல் அதனை மேம்படுத்த, நிதி தேவைபடுமென தாம் தெரிவித்தது உண்டு எனவும் ரோஸ்மா விளக்கப்படுத்தினார்.
“திரேசா கோக் நான் பணம் கேட்டதாகக் கூறுகிறார், எதிர்க்கட்சியினர் போல் நடந்துகொள்ள வேண்டாம்.”
“நான் பணமெல்லாம் கேட்க மாட்டேன். ஏதாவது செய்ய வேண்டுமென்றால் நம்மிடம் பணம் இருக்க வேண்டும். பணம் இல்லையென்றால் எப்படி, உதாரணத்திற்கு பலகாரம் செய்ய வேண்டுமென்றால், மாவு வாங்க பணம் தேவை,” என அவர் கூறியதாக எஃப்.எம்.தி செய்தி வெளியிட்டுள்ளது.
அதிகமான பெர்மாத்தா மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட வேண்டும், அதன்வழி அதிகமான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென, ரோஸ்மா அண்மையில் கூறியிருந்தார்.
எனினும், பணப் பற்றாக்குறையினால், தன்னால் அவற்றையெல்லாம் செய்ய முடியவில்லை என்றார்.
இதுவரை அரசாங்க நிதி அனைத்தையும், 100% பெர்மாத்தா செயலவையினரே நிர்வகிக்கின்றனர். அரசாங்கப் பணம் எதனையும் தான் வைத்திருந்தது இல்லையென அவர் மேலும் கூறினார்.
“பெர்மாத்தா பணம், 1 சென் கூட நான் வைத்திருக்கவில்லை, அந்தப் பணத்தை நான் பார்த்தது கூட இல்லை. பணம் தொடர்பான திட்டமிடல் மற்றும் மேலாண்மை அனைத்தையும் செயலவையினரே செய்கின்றனர்,” என்றும் அவர் கூறினார்.