‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்வில் நடந்த வன்முறை பற்றியச் செய்தி பரவியதைத் தொடர்ந்து, தலைவர்கள் சிலர் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, இந்தச் சம்பவத்திற்குப் பிரதமர் நஜிப் ரசாக்தான் சூத்திரதாரி எனக் குற்றம் சுமத்தினார்.
“டாக்டர் மகாதீர், நஜிப்புடன் ஜனநாயக முறையில், ஆரோக்கியமாகவே விவாதம் புரிய எண்ணினார். ஆனால், அவருக்கு இதுபோன்றதொரு பதில்தான் கிடைத்திருக்கிறது.”
“விவாதத்திற்குப் பயந்துபோன நஜிப், குண்டர்தனத்தைப் பயன்படுத்தி மகாதீரின் வாயை அடைக்க முயல்கிறார். இது கோழைத்தனமான செயல்,” என ஒரு பத்திரிக்கை அறிக்கையில் அஸ்மின் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தை ஆதரிக்க முடியாது என இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் அபு பாக்கார் கூறியுள்ளார்.
“அந்நிகழ்வில் நடந்த அசம்பாவிதங்களை ஆதரிக்க முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறேன்,” என்று தமது டுவிட்டர் பக்கத்தில் கைரி கூறியுள்ளார்.
முன்னாள் தகவல் அமைச்சர் ஷைனுடின் மைடின், 14-வது பொதுத் தேர்தலின் போது இன்னும் என்னென்ன நடக்குமோ தெரியவில்லை என்று எச்சரித்தார்.
“ஒரு கருத்துக்களத்திலேயேப் பாட்டில்கள் மற்றும் நாற்காலிகள் எல்லாம் மகாதீரை நோக்கி வீசப்படுகிறது என்றால், பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது என்ன நடக்கும் என எண்ணிப் பாருங்கள்,” என அவர் டுவிட்டர் வழி தெரிவித்துள்ளார்.
அம்னோ இளைஞர் பிரிவு துணைத் தலைவர் கைருல் அஸ்வான் ஹாருன், இச்சம்பவம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், இதனைக் காரணம் காட்டி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திகொள்ள வேண்டாமெனவும் அவர் கேட்டுகொண்டார்.
இன்று ஷா ஆலாமில், பெர்சத்து இளைஞர் பிரிவின் (ஆர்மடா) ஏற்பாட்டில், மகாதீர் மற்றும் நஜிப்புக்கு இடையே, விவாத மேடை நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், நஜிப் விவாதத்தில் கலந்துகொள்ள வரவில்லை. மகாதீருடனான கேள்வி பதில் நேரத்தின் போது சலசலப்பு ஏற்பட்டு, இறுதியில் வன்முறையில் முடிந்தது.
சம்பவத்தில் மகாதீருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை, ஆனால், செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர் ஒருவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.
இன்று நடந்த வன்முறைக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தவேளை, கூட்டரசுப் பிரதேச அம்னோ இளைஞர் பிரிவு தலைவர், முகமட் ரஸ்லான் ரஃப்பி, விவாதத்திற்கான அழைப்பை அம்னோ ஏற்காமல் போனது நல்லதாகப் போனது என்று கருத்துரைத்துள்ளார்.
“அதிர்ஷ்டவசமாக நாங்கள் அங்குப் போகவில்லை,” என மலேசியா கினிக்கு அனுப்பியக் குறுஞ்செய்தியில் அவர் கூறியுள்ளார்.
மேலும், அங்கு நடந்த வன்முறைக்கு ஆர்மடா பெர்சத்துதான் காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.