மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), புக்கிட் மெர்தாஜாமில் ஒரு சட்டவிரோதத் தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்த பெனாந்தி சட்டமன்ற உறுப்பினர் நோர்லேலா அரிப்பினைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டாமல் ஒதுங்கிக்கொண்ட பிகேஆரின் செயலைக் கண்டு பினாங்கு அம்னோ அதிர்ச்சி அடைந்துள்ளது.
எம்ஏசிசி மேற்கொண்ட நடவடிக்கையால் மாநிலச் சுற்றுச்சூழல், நலவளர்ச்சி, பரிவான சமுதாயம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போ-வும் சட்டவிரோதத் தொழிற்சாலை இயக்குனரும் மேலாளரும் ஐந்து நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிகேஆர் நோர்லேலாவிடம் நடந்துகொண்ட விதம் “ஏமாற்றமளிப்பதாக” அம்னோ பூலாவ் பெத்தோங் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் பாரிட் சாஆட் கூறினார்.
“2015-இலிருந்து அவர் சுட்டிக்காட்டி வந்த ஒரு விவகாரத்தின்மீது நடவடிக்கை எடுத்த எம்ஏசிசிக்கு நன்றி தெரிவித்ததற்காக அவரை ஒதுக்கி வைப்பது சரியல்ல.
“எல்லாருக்காகவும் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் பிகேஆர், மக்களின் நல்வாழ்வுக்காகப் போராடிய நோர்லேலாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமே தவிர, அவரை ஒதுக்கவோ தனிமைப்படுத்தி வைக்கவோ கூடாது”, என பாரிட் ஓர் அறிக்கையில் கூறினார்.