மலாய்க்காரர்களின் வாக்குகள் மாறிவிட்டன, பக்காத்தான் ஹராப்பான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும்

PAKATAN_HARAPAN_GROUP222 நாடாளுமன்றச் சீட்டுகளில் 113 சீட்டுகளைப் பிடிக்க, மலாய்க்காரர்களின் 10% ஓட்டும், மலாய்க்காரர் அல்லாதோரின் 5% ஓட்டும் போதுமென, ஜனநாயக செயல் கட்சியின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கோடி காட்டியுள்ளார்.

சாதாரணப் பெரும்பான்மையில், 5 மாநிலங்களோடு புத்ரா ஜெயாவையும் பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றும் வாய்ப்புள்ளது என அவர் கூறினார்.

பாஸ் பக்காத்தானுக்கு எதிர்ப்பாகச் செயல்பட்டாலும் பேராக், நெகிரி செம்பிலான், ஜொகூர் என 3 புதிய மாநிலங்களையும் கூடுதலாக பக்காத்தான் கைப்பற்றும் எனவும் அவர் மேலும் கூறினார்.

“தீபகற்ப மலேசியாவில், பொருளாதார நிலைத்தன்மை கொண்ட 5 மாநிலங்கள் மற்றும் மத்திய அரசாங்கமும் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் கீழ் வந்துவிட்டால்; நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார செயல்முறையில் உண்மையான மாற்றம் ஏற்படும்”, என்று கிட் சியாங் கூறினார்.

பேராக்கில் 39 நாற்காலிகள், நெகிரி செம்பிலானில் 19 நாற்காலிகள், ஜொகூரில் 36 இடங்களைப் பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றும் எனவும் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை, பினாங்கில் 37 நாற்காலிகளையும் சிலாங்கூரில் 50 நாற்காலிகளையும் பிடித்து, தொடர்ந்து தங்கள் ஆட்சியை நிலைநாட்டுவோம் எனவும் கிட் சியாங் தெரிவித்தார்.

பாஸ் கட்சியின் இலக்கான கிளாந்தான், கெடா மற்றும் திரெங்கானு மாநிலங்கள் குறித்து அவர் கருத்து ஏதும் கூறவில்லை.

எனினும், தேசிய முன்னனியிலிருந்து மாறிவரும் வாக்காளர்கள், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையிலான வேறுபாட்டைத் தெளிவாக அறிந்து, வாக்களிக்க வேண்டும் என லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார்.