நஜிப் : மகாதீரால் என்னை சுலபத்தில் துரத்த முடியாது

najibnotpublicofficerஅம்னோ தலைவர்களுடன் தனக்கு இருக்கும் நெருக்கம் போன்று டாக்டர் மகாதீருக்கு இல்லை. அதனால், தன்னைப் பதவியிலிருந்து விரட்ட, அவரால் முடியாது எனப் பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார்.

“அந்த முன்னாள் பிரதமர், மாநில மந்திரி பெசார்களின் வழியே ஒவ்வொரு மாநிலத்தையும் இயக்கி வந்தார். அம்னோ பிரிவு தலைவர்கள் யாரையும் அவருக்கு நேரிடையாகத் தெரியாது.”

“ஆனால், நான் அப்படியல்ல. அவர்களுடன் இணைந்து, அவர்களில் ஒருவனாகச் செயல்படுகிறேன். அதனால், அவரால் என்னை அவ்வளவு சுலபத்தில் துரத்தியடிக்க முடியாது,” என நஜிப் கூறினார்.

“23 வயதாவதற்கு முன்னமே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். இரண்டு தலைமுறை அம்னோ தலைவர்களுடன் நான் வளர்ந்தேன், அது எனக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது,” என ஸ்டார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் நஜிப் கூறியுள்ளார்.

தனக்கு எதிரான டாக்டர் மகாதீரின் விமர்சனங்கள் சற்றும் எதிர்பார்க்காதவை என நஜிப் தெரிவித்தார்.

“மகாதீர் அவருக்கே உரித்தான பாணியில் ஆவேசப்படுகிறார். அவர் என்னை விமர்சனம் செய்வாரென எனக்குத் தெரியும். ஆனால், அது இவ்வளவு மோசமாக இருக்குமென நான் நினைத்ததில்லை,” என்று நஜிப் கூறினார்.

“மகாதீர் ஒரு ஹெவிவேய்ட் குத்துச்சண்டை வீரர் மாதிரி. நீங்கள் ரன்அவுட் ஆகும்வரை, அவர் தாக்கிக் கொண்டே இருப்பார் என லீ குவான் யூ ஒருமுறை என்னிடம் கூறியுள்ளார்,” என அந்தச் சிங்கப்பூர் முன்னாள் பிரதமருடனான உரையாடலை நஜிப் நினைவு கூர்ந்தார்.

“இது மகாதீரின் ஒரு பக்கம் மட்டுமே. அவரைக் கட்டுப்படுத்துவது சிரமம். லீ குவான் யூவின் கருத்து nuar, kit siang, mahaசரியானது,” என அவர் மேலும் கூறினார்.

மேலும், டாக்டர் மகாதீர் மற்றும் தனது அரசியல் எதிரிகளான அன்வார் இப்ராஹிம் மற்றும் லிம் கிட் சியாங் இடையிலான கூட்டிணைப்பு ‘மாச்சியாவெல்லியனிச அரசியல்’ (Machiavellianism – சுயலாபத்திற்காகப் பொய் சொல்லுதல், பிறரை நசுக்குதல்), ‘உயர் பாசாங்குத்தனம்’ என நஜிப் வர்ணித்தார்.

பிரதமராக இருந்த காலத்தில், பலரைப் பயமுறுத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் மகாதீர் வைத்திருந்தார். ஆனால், இப்போது அந்த உத்தி பயன்படாது எனவும் நஜிப் தெரிவித்தார்.

“இப்போது அவர் அம்னோ தலைவர் இல்லை, அவர்மீது இப்போது யாருக்கும் பயம் இல்லை. எனவே, இனி யாரையும் கட்டுப்படுத்தவோ, அம்னோவிற்குள் எதனையும் தீர்மானிக்கவோ அவரால் முடியாது. அவர்மீது மரியாதை இருக்கிறது, ஆனால், பயமில்லை,” என அம்னோ தலைவருமான நஜிப் ரஷாக் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.