சிருல் பாதுகாப்பு விசாவுக்காக ஆஸ்திரேலிய அரசிடம் மேல்முறையீடு

apealதப்பியோடிய  கொலைக்குற்றவாளியான   சிருல்   அஸ்ஹார்   உமர்,  மலேசியாவுக்குத்  திருப்பி   அனுப்பப்பட்டால்   தன்னைத்  தூக்கிலிட்டு   விடுவார்கள்    என்பதால்   தன்னுடைய   பாதுகாப்பு   விசாவை   நிராகரிக்கக்   கூடாது    என்று  ஆஸ்திரேலிய   அரசாங்கத்திடம்   கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அந்த  முன்னாள்  போலீஸ்  அதிரடிப்  படைவீரர்   ஆஸ்திரேலியாவில்   தங்குவதற்கு    விசாவுக்காக   செய்துள்ள    மனு   நிராகரிக்கப்படலாம்    என்று    குடிநுழைவு,  எல்லைப்  பாதுகாப்புத்   துறை    கூறியதை     அடுத்து   சிருலின்   வழக்குரைஞர்கள்   அந்த  முறையீட்டைச்  செய்து  கொண்டிருப்பதாக     த   ஆஸ்திரேலியன்    நாளேடு   கூறிற்று.  அவர்  ஆஸ்திரேலியாவுக்குள்   நுழையும்  முன்னரே  “அரசியலற்ற  கடுங்  குற்ற” மொன்றச்  செய்துள்ளார்  என்பதால்  அவருக்கு  விசா  வழங்கும்   சாத்தியமில்லை    என்று   கூறப்படுகிறது.

சிருலுக்கு   விசா   கிடைக்க     வேண்டுமானால்     அவர்   தான்   ஒரு  அரசியல்  பகடைக்காயாக   ஆக்கப்பட்டிருப்பதாகக்  கூறிக்கொள்வதற்கு    ஆதாரம்  காண்பிக்க   வேண்டும்.  அதையும்   திங்கள்கிழமைக்குள்  காண்பிக்க  வேண்டும்   என   ஆஸ்திரேலியன்   தெரிவித்தது.

கூட்டரசு   நீதிமன்றம்   மங்கோலிய   பெண்  அல்டான்துன்யா  ஷரீபு  கொலை  வழக்கில்    சிருலுக்கும்  அவரின்  சகாவான   அஸிலா  ஹட்ரிக்கும்   மரண  தண்டனையை   உறுதிப்படுத்தியதை    அடுத்து    சிருல்  ஆஸ்திரேலியாவுக்குத்   தப்பி   ஓடினார்.

ஆஸ்திரேலிய   அரசாங்கம்    தன்   நாட்டுக்குத்     தப்பியோடி     வந்த   மரணதண்டனை  குற்றவாளிகளைத்   திருப்பி   அனுப்புவதில்லை.   எனவே,  சிருலின்   விசா  விண்ணப்பம்   நிராகரிக்கப்படுமானால்   அவர்  காலவரையின்றிக்   காவலில்   இருக்க   வேண்டி   வரலாம்.