நேற்று கைது செய்யப்பட்ட பெல்டாவின் முன்னாள் தலைவர் முகம்மட் இசா சமட்டின் சொத்துக்களை முடக்குவது தொடர்பில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்னும் முடிவு செய்யவில்லை. பெல்டாவின் துணை நிறுவனமொன்று இரண்டு ஆடம்பர ஹோட்டல்கள் வாங்கியதன் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணை அதிகாரிகளிடமிருந்து மேலும் தகவல்கள் வந்த பின்னர்தான் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் அசாம் பாகி கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
“அவர் (இசா) பணம் கையாடல் செய்தார் என்று நான் சொல்லவில்லை…. ஊகங்களுக்கு இடமளித்து விடாதீர்கள். விசாரணை நடக்கிறது.
“நாங்கள் விசாரணைக்கு மேலும் பலரை அழைக்கக்கூடும்”, என்றாரவர்.