விவசாயம் மற்றும் கால்நடை நிலங்கள் அபகரிப்பு, பொது விசாரணை நடத்த சுஹாகாம் இணக்கம்

சேகர் - மீன்பேராக் மாநிலத்தில் பல ஆண்டுகளாகத் தரிசாகக் கைவிடப்பட்ட அரசு நிலங்களை மேம்படுத்தி, அவற்றில் பல வகையான  காய்கறிகள், பழங்கள் மற்றும் கால் நடைகள் வளர்த்து வரும் எண்ணற்ற விவசாயிகள்  தொடர்ந்து வற்புறுத்தலாகவும்   நீதிமன்ற நடவடிக்கைகளின் வழியாகவும் வெளியேற்றப்படுவதைத் தடுத்திட;  ஒரு பொது விசாரணை நடத்த வேண்டும் என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.)  முன்வைத்த பரிந்துரையை, கொள்கை அளவில் சுஹாகாம் ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் தேசியத் துணைத்தலைவர் மு. சரஸ்வதி தெரிவித்தார்.

நேற்று முன்தினம், துரோனோ கம்போங் பாலி புதுக்கிராமத்தைச் சேர்ந்த 39 அழகு மீன்கள் வளர்க்கும் மீன் வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்தும், அவர்களைப் பாதுகாக்க மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டுமென்றும் கோரி, மகஜர் ஒன்று அதன் ஆணையர் ஜெரால் ஜோசப்பிடம்  அதன் தலைமையகத்தில் வழங்கப்பட்டது.

இவ்விடத்தில் மீன் வளர்ப்போர் 1980 முதல் தங்களது சுயமுயற்சியாலும் சொந்த முதலீட்டாளும் மீன் வளர்ப்புக்கான பல நூறு குளங்களைத் தயார் செய்து தொழில் நடத்தி வருகின்றனர். மாநில மீன் வளர்ப்பு வாரியத்தின் ஆதரவோடும் ஆலோசனையோடும் மட்டுமின்றி; மாநில அரசின் ஊக்குவிப்போடும்  ஆண்டுக்கொருமுறை ஒரு மில்லியன் முதல் இரண்டு மில்லியன் அழகு மீன்களை உற்பத்தி செய்து, அவற்றை உள்நாட்டு பயன்பாட்டிற்கும் வெளிநாடுகளின் ஏற்றுமதிக்கும் இவர்கள் துணையாக இருந்து வருகின்றனர்.

இவர்களின் பராமரிப்பில் உள்ள 162 ஏக்கருக்கு மேலான நிலங்கள், இன்று பறிபோகும் நிலையில் இருப்பதாக இம்மீன் வளர்ப்பவர்களின் விவகாரத்தில் உதவிக்கரம் நீட்டிவரும் வழக்கறிஞர் குணசேகரன் மனித உரிமை ஆணையத்திடம் விளக்கினார். அதுமட்டுமன்றி, தற்போது நடந்துமுடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இவர்களின் உற்பத்தியினை விவசாயத்துறை அமைச்சரும் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் ஆணையத்திடம் கூறினார்.

ஏற்கனவே 2013-ல், மாநில அரசு  சட்டமன்றக் கூட்டத்தொடரில் வாக்குறுதி அளித்த பரிந்துரைகள் என்னவானது என்பதையும் மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும். அதோடு, உண்மை நிலவரங்களை அறியவும், இத்துறையில் மீன் வளர்ப்போர்களுக்கு  உள்ள ஈடுபாட்டினைக் காணவும், மனித உரிமை ஆணையம்  நேரிடையாக அங்கு வருவதற்கு அழைப்பும் விடுக்கப்பட்டதாக குணசேகரன் தெரிவித்தார்.

சுமார், ஒரு மணி நேரம் நடைபெற்ற அச்சந்திப்பில், மீன் வளர்ப்போர்களின் புகார்களையும் விளக்கங்களையும் கவனமாகக் கேட்டறிந்த அதன் ஆணையர், ஜெரால் ஜோசப் அவர்கள், புகார் மகஜரில் உள்ள சாரம்சங்களை தாம் ஆராய்வதாகவும், நேரிடையாக கம்போங் பாலி மீன் வளர்ப்பு இடத்திற்கு வருவதாகவும் உறுதியளித்ததாகத் தெரிகிறது.

மேலும், பி.எஸ்.எம். முன்வைத்த பொது விசாரணைக் கோரிக்கைக்கும் கொள்கை அளவில்  இணங்கிய ஆணையர், பாதிப்புக்குள்ளாகி வரும் மற்ற விவசாய நிலங்களின் விவரங்களையும் தமக்குச் சமர்ப்பிக்கும் படி  கேட்டுக் கொண்டதாகவும் சரஸ்வதி தெரிவித்தார்.