இன்று காலை, கம்பாரில் விவசாயம் மற்றும் கால்நடை நிலங்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்க, மாவட்ட ஆட்சியாளர் நேரிடையாகத் தலையிட வேண்டுமெனக்கோரி, கம்பாரைச் சேர்ந்த 100 விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்போர், மாவாட்ட நில அலுவலகம் முன் அமைதி மறியலில் இறங்கினர்.
கடந்த 1970 முதல், மம்பாங் டியாவான், மாலிம் நாவார் மற்றும் கம்பார் பகுதிகளில் விவசாயம் மற்றும் கால் நடை வளர்ப்புக்குப் பயன்படுத்திய நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இன்று பறிபோகும் நிலையில் இருக்கின்றன. பல விவசாய நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனை மாவட்ட நில அலுவலகம் கவனிக்க வேண்டும் என விவசாயிகளின் பேச்சாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.பவானி துணை மாவாட்ட அதிகாரி முகமட் ஹிடாயாட்டிடம் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, 1980-ம் ஆண்டு வாக்கில் முன்னாள் பேராக் மாநில மந்திரி பெசார் ரம்லி ஙா தாலிப் உள்நாட்டு விவசாயம் வளர வேண்டுமென அன்று அளித்த ஊக்குவிப்பும் ஆதரவும்தான், கம்பார் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களை மேம்படுத்த காரணம் எனவும் மகஜரில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகவே, பாதிப்பினை எதிர்நோக்கிவரும் விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்போரின் நிலவிவகாரம் தொடர்பாக மூன்று அம்ச கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
1. நீண்ட காலமாக இவர்கள் இவ்விடத்தில் விவசாயம் செய்து வருவது அரசு நிறுவனங்களுக்குத் தெரிந்தும், ஏன் இவர்களுக்கு நில உரிமம் அல்லது அனுமதி வழங்கப்படவில்லை?
2. தொடர்ந்து இவ்விடத்திலேயே விவசாயம் செய்வதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு கவனிக்க வேண்டும்.
3. இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட நில அலுவலகம் உடனடியாக விவசாயிகளுடான சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்ய வேண்டும்.
மகஜரைப் பெற்றுக்கொண்ட நில மாவட்ட துணை அதிகாரி, அதனை மாவட்ட அதிகாரியிடம் வழங்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
விவசாயம் ஒன்றே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் விவசாயிகளின் பங்கினையும் உள்நாட்டு உற்பத்திக்கு உறுதுணையாக விளங்கும் இவர்களின் அற்பணிப்பினையும் மாநில அரசு அங்கீகரிக்க வேண்டும் என விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துகொண்ட பி.எஸ்.எம். துணைத் தலைவர் மு.சரஸ்வதி மாநில அரசினைக் கேட்டுக்கொண்டார்.