கிழக்குக் கடற்கரை இரயில்வேத் திட்டத்தில் (இ.சி.ஆர்.எல்.) சீனா முதலீடு செய்ததைத் தொடர்ந்து, அரசாங்கம் நாட்டை விற்க முனைந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குறைகூறத் தொடங்கிவிட்டனர் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
இந்த மெகா திட்டத்தில் ஒட்டுமொத்தமும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச் சொந்தமானது அல்ல, பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கும் 30% தெண்டர், கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.
“பிரதமர் நஜிப் ரஷாக், நாட்டின் மேம்பாட்டிற்குப் பல புதிய முதலீடுகளைக் கொண்டுவருவதைப் பார்த்து, பீதியடைந்த எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர்.”
“முன்பு நாம் ‘கிழக்கை நோக்கும் கொள்கை’ –யைக் கடைபிடித்தபோது, நாட்டை ஜப்பானுக்கு விற்றுவிட்டதாக யாரும் சொல்லவில்லை. பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களில் ஒன்றை ஜப்பானிய நிறுவனமும் மற்றொன்றைத் தென் கொரிய குத்தகையாளர்களும் கட்டியெழுப்பினர். அப்போது யாரும் நாட்டின் இறையாண்மையை விற்றுவிட்டதாகக் கூப்பாடு போடவில்லை,” என இன்று நிபோங் திபால் அம்னோ பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
எனவே, எதிர்க்கட்சியினர் பரப்பிவரும் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும், குறிப்பாக சமூக ஊடகங்களில், அம்னோ மிகவும் தீவிரமாக கண்கானிக்க வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.
“நீண்ட காலத்திற்கு இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் இருக்கக்கூடாது. ஏனெனில், நாம் அதற்குப் பதிலளிக்காவிட்டால், கடைசியில் அவதூறுகள் உண்மையென நம்பப்பட்டு, நம் மீதான நம்பிக்கை இழக்கப்படும். எனவே, சமூக ஊடகங்களில் திறமையான இளைஞர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தியே, அவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என நான் அம்னோ இளைஞர் மற்றும் புத்ரி அம்னோ உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
இந்த இ.சி.ஆர்.எல். திட்டத்தின் மூலம், நம் நாட்டின் கல்வித் துறைக்கும் பயன் உண்டு என்றும், ரயில்வே மார்க்கெட்டிங் பயிற்சி மேற்கொள்ள, கியாட் மாராவைச் சேர்ந்த 750 பயிற்சியாளர்களுக்கு இத்திட்டத்தின் வழி பயிற்சியளிக்கப்படும் எனவும், கிராமப்புற மற்றும் கூட்டரசுப் பிரதேச மேம்பாட்டு அமைச்சருமான இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
“அதுமட்டுமல்லாமல், இரயில் பொறியியல் தொடர்பான கல்வியை வழங்க, யூனிகேல் ஒரு புதிய துறையையே உருவாக்க உள்ளது. எனவே, இது நம் இளைஞர்களிடையே திறமையான மனிதவளத்தைப் பயிற்றுவிக்கும்” என்றும் அவர் கூறினார்.
நாட்டை விற்று விட்டதாகச் சொல்லவில்லை! உங்கள் குடுமி அவர்கள் கையில் என்கிறோம்!
நாடு வளர்ச்சிக்கான வேண்டும் , உள்ளூர்மக்களுக்கு வேலைவாய்ப்பினை பெருக்கிட வேண்டும் , எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் உள்ளூர் மக்களுக்கு , குத்தகைக்காரர்களக்கு கண்டிப்பாக சதவீத அடிப்படையில் வாய்ப்பினை வழங்கவேண்டும் என்றில்லாமல் , 30 % சதவீதம் பூமிபுத்ரா நிறுவனங்களுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை கொடுக்கப்பட்டுளள்து என கூறுகின்றார் அமைச்சர் . இது பிரிவினை இல்லையா ? இனம் ஒதுக்கல் இல்லையா ? இப்படிருக்க தமிழ் பள்ளி , சீன பள்ளி மூலமாகவே இனம் ஓட்டுக்கள் ஆரம்பமாகுகிறது , ஒற்றுமை சீர்குலைக்கப்படுகிறது என்று ஒருமுறை இந்த அமைச்சர் அறிக்கை விட்டது ஞாபகத்தில் வருகிறது . வெளிநாட்டு நிறுவனங்களும் இவர் செல்வதை போல 30 % சதவீத குத்தகையை இலஞ்சம் வாங்கும் சோம்பேறி நிர்வாக திறன்மையில்லா நிறுவனத்திற்கு கொடுத்தப்பிறகு , கொடுக்கப்பட்ட வேலையை செய்துமுடிக்கப்படாமல் , மறுபடியும் மொத்த செலவுகளையும் தாமே ஏற்று வேலையினை செய்து முடிக்கவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளாது என்பது அனைவரும் நன்கு அறிவர் . அமைச்சரின் பேச்சு திறமை அபாரம் .
சீனாவுக்கு விற்றால் யாருக்கும் நட்டம் இல்லை.