ஊடகச் சுதந்திரம் இப்போது சிறப்பாக உள்ளது? அடிப்படையற்றக் கூற்று, முன்னாள் பத்திரிக்கையாளர்கள் கருத்து

zam-zahid-mediaடாக்டர் மகாதிர் முகமது தலைமைத்துவக் காலத்தைவிட, தற்போது ஊடகச் சுதந்திரம் சிறப்பாக உள்ளது என்று துணைப் பிரதமர் அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி கூறுவது தவறு என்று இரண்டு மூத்தப் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டாக்டர் மகாதீர், மாதத்தில் ஒரு முறையாவது பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என உத்துசான் மலேசியா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர், ஷைனுடின் மைடின் கூறினார்.

அக்கூட்டத்தில், நாட்டின் சமகாலப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதோடு, நிருபர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டு, மதிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

“எங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பற்றி எழுதவும் சுதந்திரம் இருந்தது. உதாரணத்திற்கு, நிக் அப்துல் அசிஸ் நிக் மாட், கிளாந்தான் மந்திரி பெசார் பதவியை வென்றபோது, அவரைப் பேட்டியெடுத்து, 3 நாட்கள் தொடர்ந்து பிரசுரித்து வந்தோம். தங்களுக்கும் ஏன் அத்தகைய வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற பிற மாநிலத் தலைவர்களின் கேள்விகளுக்கு மத்தியில், உத்துசான் அனைத்து பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன.”

“என்னைப் பொறுத்தவரை, மக்கள் குரலின் பிரதிபலிப்பாகவே உத்துசான் பத்திரிக்கை இருக்க ஏட்ஜ்வேண்டும் என விரும்பினேன், அம்னோவின் கருவியாக, இப்போது இருப்பதைப் போல் அல்ல,” என்று     எஃப்.எம்.தி. இணையப் பத்திரிக்கையிடம் அவர் தெரிவித்தார்.

நிக் அஷிஸ் பேட்டியைப் பிரசுரித்ததற்காக, டாக்டர் மகாதீர் என்னைத் தொந்தரவு செய்ததில்லை; 1987 அம்னோ தேர்தலில், மகாதீரை எதிர்த்து நின்ற தெங்கு ரஷாலியின் செய்தியை உத்துசானில் வெளியிட அவர் தடுக்கவில்லை,” என ஷைனுடின் மேலும் கூறினார்.

இன்று இருக்கும் உத்துசான் போல் அல்ல, எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துகளைக்கூட, ‘கட்சி பாகுபாடுகளைக் கடந்து’ எனும் அதன் இலக்குக்கு இசைவாக, அந்த மலாய் நாளேட்டில் இன்று வெளியிட முடிவதில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

“மற்றவர்கள் சொல்வதுபோல், மகாதீர் பத்திரிக்கைச் சுதந்திரத்தை எப்போதுமே கட்டுப்படுத்தியதில்லை, தொலைபேசியில் அழைத்து, நாங்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்றெல்லால் கட்டளையிட்டதில்லை. அதனால்தான், உத்துசான் பத்திரிக்கை விநியோகம் அதிகமாக இருந்தது. ஷாஹிட் போன்ற அம்னோ அமைச்சர்கள், தங்களுக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி பேசாமல் இருப்பது நல்லது,” என்றும் ஷைனுடின் சொன்னார்.

நேற்று, முன்னாள் பிரதமர் ஒருவர், தேசிய செய்தி நிறுவனங்களைக் கண்கானித்து, கட்டுப்படுத்தி வந்ததாகவும்; அவருக்கு அடுத்து வந்த பிரதமர்கள், செய்தி ஊடகங்கள் சுதந்திரமாகச் செய்திகளை வெளியிட அனுமதித்ததாகவும் ஷாஹிட் கூறியிருந்தார்.

அந்த முன்னாள் பிரதமர் யாரென்று அவர் கூறாவிட்டாலும், நீண்ட காலம் பதவியில் இருந்த மகாதீரைதான் அவர் சாடியுள்ளார் என்று நம்பப்படுகிறது.

மலேசியாகினியின் தலைமை ஆசிரியர், ஸ்டீவன் கானைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அவரும் இதனையேக் கூறினார்.

Premesh-stevenமகாதீர் காலத்தோடு ஒப்பிடுகையில், தற்போது ஊடகத் துறையின் சுதந்திரம் படுமோசமாக உள்ளதாகக் கான் தெரிவித்தார்.

“2003 இல், டாக்டர் மகாதிர் நிர்வாகத்தின் இறுதி காலகட்டம் அது, எங்கள் அலுவலகத்தைச் சோதனை செய்து, 19 கணினிகளைக் கைப்பற்றியபோது, நாங்கள் யாரும் குற்றம் சாட்டப்படவில்லை. ஆனால், சமீபகாலமாக எங்கள் அலுவலகம் பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, என் மீதும், மலேசியாகினியின் தலைமை நிர்வாக அதிகாரி பிரெமெஸ் சந்திரன் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று கான் கூறினார்.

“அதுமட்டுமின்றி, நஜிப் ரசாக் எங்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். ஒரு பிரதமர் ஊடக அமைப்பு மீது வழக்கு தொடர்ந்துள்ளது இதுவே முதன்முறையாகும்,” என்றும் கான் மேலும் கூறினார்.