பிகேஆர் கட்சியில் உள்ள சிலருக்கு அது பாஸ் கட்சியுடன் பேச்சு நடத்துவது பிடிக்கவில்லை. அதன் விளைவாக அக்கட்சியில் விரிசல் பெரிதாகிக்கொண்டு வருகிறது.
பாஸுடன் பேச்சு நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிகேஆர் எம்பி வில்லியம் லியோங் கட்சியின் அரசியல் செயலகத்திலிருந்து விலகிக் கொண்டிருப்பதாக அறிவித்தார்.
“ என்னால் (பாஸுடன் ஒத்துழைப்பதைத் தற்காத்துப் பேச) முடியாது.
“அப்படிச் செய்ய முடியாது என்பதால் விலகிக்கொள்வதுதான் நல்லது”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் அந்த செலாயாங் எம்பி கூறினார். தன் முடிவைக் கட்சி மேலிடத்துக்கும் தெரிவித்து விட்டதாக அவர் சொன்னார்.
ஆனால், அவர் பிகேஆர் உறுப்பினராகவும் கட்சியின் தலைமைத்துவ மன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து இருப்பார்.
பிகேஆர் அரசியல் செயலகம்தான் அக்கட்சியின் நிர்வாகத் தளம். வாரத்துக்கொரு முறை அது கூடுகிறது. கட்சித் தலைவர் அதன் கூட்டங்களுக்குத் தலைமை ஏற்பார். அதன் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் கட்சியின் மூத்த உறுப்பினர்களே அதற்கு நியமிக்கப்படுகிறார்கள்.
கடந்த இரண்டாண்டுகளாக பாஸ் கட்சி நடந்து கொண்ட விதம் கேலிக்கும் கேள்விக்கும் உட்பட்டிருந்த வேளை இப்போது அந்த கட்சியுடன் மீண்டும் கைகோர்த்து அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நினைப்பது மலாய்க்காரர் அல்லாதோரின் அபிலாஷைகளை புறக்கணிப்பது மட்டுமல்லாது அமானா கட்சியின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள தவறியதுமாகிவிட்டது.