நியாட் எனப்படும் தேசிய இந்தியப் போராட்ட அமைப்பின் தலைவர் சமுதாயச் சுடர் ஹாஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் அவர்கள் இன்று இரவு டாமன்சாரா கேபிஜே மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மலேசிய இந்தியர்கள் உற்ற தோழரை இழந்து விட்டனர் என்று சேவியர் ஜெயக்குமார் அவரது இரங்கல் செய்தியில் கூறுகிறார்.
“அவர் ஓர் இஸ்லாமியக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்றாலும், சமயப் பாகுபாடின்றி தமிழர்கள் மீது அதிக அக்கறை கொண்டு நீதிக்கு வாதிட்டவர். இந்தியர்களுக்காக, இண்டர் லொக் நாவலுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். குழந்தைகளைத் தாய்மார்களிடமிருந்து பிரித்து ஒரு சார்பாக மதமாற்றம் செய்வதைக் கடுமையாகக் கண்டித்தவர். ஏழைத் தாய்மார்கள் மீது அக்கறை கொண்ட ஓர் அன்பான சகோதரரைத் தமிழ்ச் சமுதாயம் மட்டுமின்றி இந்த நாடே இழந்துவிட்டது.
“அவரின் இழப்பு இந்தியர்களுக்கு ஈடுகட்ட முடியாத ஒன்று. அவரின் பிரிவால் துயரத்தில் வாடும் அவர் குடும்பத்தினர் மற்றும் நியாட் உறுப்பினர்களுடன், நாங்களும் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துகொள்கிறோம்”, என்று சேவியர் மேலும் கூறினார்.