சரவாக், காபிட்டில் ஏழு வயது மாணவனுக்கு மரணம் விளைவித்ததற்காக ஆறாம் ஆண்டு மாணவன் ஒருவன், நேற்று போலிசாரால் கைது செய்யப்பட்டான்.
கடந்த செவ்வாய்க்கிழமை, இங்குள்ள ஒரு விடுதிப்பள்ளியில், சக மாணவனால் கடுமையாகத் தாக்கப்பட்ட அந்த முதலாம் ஆண்டு மாணவன், பள்ளி நிர்வாகத்தினரால், சிபு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல், நேற்று அவன் உயிர் பிரிந்தது.
பள்ளியின் ஆசிரியர் ஒருவர், அச்சிறுவன் மயக்க நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான் என்று அவனது தந்தையிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, சிறுவனின் தந்தை போலிசில் புகார் செய்ததாக, சரவாக் போலிஸ் தலைவர் அமீர் அவால் தெரிவித்தார்.
நேற்று மாலை 3.30 மணியளவில், அச்சிறுவன் மரணமடைந்ததைத் தொடர்ந்து, போலிசார் அந்த 6-ஆம் ஆண்டு சந்தேகத்திற்குரிய மாணவனைக் கைது செய்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
“நாங்கள் குற்றவியல் தண்டனையின் 302 -ஆம் பிரிவின் கீழ், இவ்வழக்கை விசாரணை செய்கிறோம். அடுத்த மாதம், அம்மாணவன் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு எழுதவுள்ளதால், போலிஸ் பிணையில் அவன் விடுவிக்கப்பட்டுள்ளான்,” என்று அமீர் தெரிவித்ததாக தி போர்னியோ போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவன், சந்தேகத்திற்குரிய மாணவனை அடிக்கடி கேலி செய்துவந்ததால் அவன் தாக்கப்பட்டதாக, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலிஸ் தரப்பு செய்திகள் கூறுகின்றன.
காபீட் மாவட்ட காவல்துறை தலைவரின் தலைமையில், இவ்வழக்கை விசாரிக்க ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
“இந்த சம்பவத்தை நான் மிகவும் கடுமையாகக் கருதுகிறேன். இந்த வகையான விஷயங்கள், பள்ளியில் எப்படி நடந்திருக்கும் என்பதை அறிந்துகொள்ள, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், விடுதியின் வார்டன் என அனைவரின் வாக்குமூலங்களையும் நாங்கள் பதிவு செய்யவுள்ளோம்.”
“பள்ளியில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது என்று சொன்னால், நான் நம்பமாட்டேன். ஏனென்றால், இச்சம்பவத்திற்கு முன்னதாக பல நிகழ்வுகள் நிச்சயம் நடந்திருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன்,” என்று அமீர் மேலும் கூறினார்.
இறப்பிற்கான உண்மை காரணத்தைத் தீர்மாணிக்க, சவப் பரிசோதனை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.