பி.எஸ்.எம்: நஜிப் ஹிண்ட்ராப்பைக் கையாண்ட விதத்தை டாக்டர் மகாதீர் பின்பற்றுகிறார்

psm-mahathir-313-வது பொதுத் தேர்தலில், மலேசிய இந்தியர்களின் ஓட்டுகளைக் கவர, நஜிப் கையாண்ட வழியை, இன்று, டாக்டர் மகாதீர் பின்பற்றுகிறார் என்று மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் கூறியுள்ளார்.

ஹிண்ராப்ட் இயக்கத்தின் தலைவர் பொ.வேதமூர்த்தியை டாக்டர் மகாதீர் சந்தித்தது, பக்காத்தான் ஹராப்பானுக்கு இந்தியர்களின் ஆதரவைத் திரட்டவே என்று அவர் கூறினார்.

இந்நடவடிக்கையானது, பாரிசான் நேசனலின் இனவாத அரசியலையேப் பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“பாரிசானில் ம.இ.கா.-வைப் போல், ஹிண்ராப்ட் இயக்கத்தை எதிர்க்கட்சியில் இந்தியர் பிரதிநிதியாகக் காட்ட அவர்கள் முயல்கின்றனர்,” என்றார் அவர்.

“இந்த இனவாத அரசியலைக் கைவிட வேண்டியக் காலக்கட்டம் மலேசியாவிற்கு வந்துவிட்டது, என நாங்கள் கருதுகிறோம்,” என்றும் அருட்செல்வன் தெரிவித்தார்.

பி.எஸ்.எம். கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகமும் இதேக் கருத்தைத் தெரிவித்தார்.a-sivarajan-psm

“என்னைப் பொறுத்தவரை, இது எந்தவொரு உறுதிபாட்டையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல, நீண்டகால திட்டமும் அல்ல.”

“வேதமூர்த்தி பாரிசானுடன் ஒத்துழைத்தபோது, இந்தியர்களுக்கான ஒரு புரிந்துணர்வு திட்டம் இருந்தது. ஆனால், இப்போது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை. பக்காத்தான் தலைவர் மகாதீர் மற்றும் வேதா இடையிலான பேச்சுவார்த்தையின் விவரம் எங்களுக்குத் தெரியவில்லை,” என சிவராஜன் மேலும் கூறினார்.

ஆனால், பக்காத்தான்-ஹிண்ட்ராப் ஒத்துழைப்பு, பக்காத்தானுக்கு இந்தியர்களின் ஆதரவைத் திரட்டுவதையே அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளதைக் காணமுடிகிறது என்றார் அவர்.

வேதமூர்த்தியுடனான 1 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின், பக்காத்தானில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் சிறப்பாக இல்லையென்பதை, மகாதீர் ஒப்புக்கொண்டார். அதோடு, அக்கூட்டணி திறம்பட செயல்பட இந்தியர்களின் ஆதரவும் முக்கியம் என்றும் கூறினார்.

“பக்காத்தானின் உறுப்புக் கட்சியாக இல்லாவிடினும், குறைந்தபட்சம் எதிர்க்கட்சியின் ஒரு பிரிவாகவாது ஹிண்ராப்ட் இருக்க வேண்டுமென்பதற்கே, நாங்கள் முயற்சிக்கிறோம்,” என்று மகாதீர் கூறியிருந்தார்.

அந்தப் பேச்சுவார்தைக்குப் பின், பக்காத்தானில் ஹிண்ராப்ட் இயக்கத்தையும் இணைத்துகொண்டால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளைப் பக்காத்தானுக்கு ஆதரவாக அணிதிரட்ட முடியுமென்று வேதமூர்த்தி தெரிவித்திருந்தார்.