பாஸ் பேச்சுகள்மீது சிறப்பு மாநாடு கூட்டுக: பிகேஆரில் கோரிக்கை

பாஸுடன்   தொடர்புகள்   வைத்துக்கொண்டிருப்பது      கட்சிக்குள்  பதற்றத்தை   உண்டாக்கி  இருப்பதால்  அது   குறித்து     விவாதிக்க   சிறப்பு   மாநாடொன்று   கூட்டப்பட   வேண்டுமென்று    பிகேஆர்   தொகுதித்  தலைவர்கள்  சிலர்   கோரிக்கை   விடுத்துள்ளனர்.

தங்களை   ஹராபான்  பக்கத்தான்   பணிக்குழு   என்று   அழைத்துக்கொள்ளும்   அவர்கள்,  பாஸுடன்  பேச்சுகள்   நடத்துவது    பக்கத்தான்  ஹராபான்   கூட்டணியில்   உள்ள   பிகேஆர்  பங்காளிக்கட்சிகளிடையே  விரிசல்களை   ஏற்படுத்தியிருப்பதாகக்   கூறினர்.

“பிகேஆரின்  செய்கை   அது  ஹராபான்பால்  கடப்பாடு   கொண்டிருக்கவில்லை   என்ற  தோற்றத்தை  உருவாக்கி  விடலாம்   என்று  கவலை  கொள்கிறோம்”,  எனப்  பணிக்குழுத்    தலைவர்    யூசுப்   தாப்பார்    தெரிவித்தார்.

ரெம்பாவ்  பிகேஆர்   தொகுதித்   தலைவருமான   யூசுப்,  சிறப்பு  மாநாடு   கட்சியின்   அடிநிலைத்    தலைவர்கள்    அவர்களின்  கருத்துகளை   வெளிப்படுத்த   வாய்ப்பளிக்கும்   என்றார்.

1/3  தொகுதிகள்   கேட்டுக்கொண்டால்   அப்படி  ஒரு  மாநாட்டை   நடத்த   கட்சி  அமைப்புவிதிகள்    இடமளிக்கின்றன   என்றாரவர்.

தங்கள்  கோரிக்கையை   56  தொகுதிகள்   ஆதரிப்பதாக   அவர்    சொன்னார்.   சிறப்பு  மாநாட்டைக்   கூட்ட   குறைந்தது  73  தொகுதிகளின்   ஆதரவு  தேவை.

தேவையான   எண்ணிக்கையைப்  பெற   முடியும்    என்று   நம்பிக்கை   தெரிவித்த    அவர்   ஒரு  மாதத்துக்குள்   மாநாடு  கூட்டப்படும்   என்றார்.

பிகேஆர்   பாஸுடன்   நடத்தும்  பேச்சுகள்  தொடர்பில்   கட்சிக்குள்ளேயே  உயர்மட்டத்தில்   கருத்துவேறுபாடுகள்  நிலவுகின்றன.  பாஸுடன்   தொடர்ந்து   பேச்சு   நடத்துவதில்   பிகேஆர்  பிடிவாதமாக  இருப்பது   கண்டு    பல   தலைவர்கள்  வெறுப்படைந்துள்ளனர்.

அதன்   தொடர்பில்   பிகேஆரில்   நிலவி  வந்த   பதற்றம்   இப்போது    பிகேஆர்  பங்காளிக்கட்சிகளையும்   பற்றிக்  கொண்டது.

அவ்விவகாரம்   குறித்து   விவாதிக்க   பக்கத்தான்   ஹராபான்   தலைவர்   மன்றம்  இன்றிரவு   கூடுகிறது.