பக்காத்தான் ஹாராப்பன் கட்டமைப்பிற்கு வெளியே, பாஸ் உடன் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தைகளைப் பிகேஆர், விளக்க வேண்டும் என்று ஷைட் இப்ராஹிம் இன்று வலியுறுத்தினார்.
மேலும், இன்றிரவு நடைபெறவுள்ள பக்காத்தான் கூட்டணி சந்திப்பில், அத்திட்டத்தை நிராகரிக்கும் அமானா, தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
“அமானா இன்று தங்கள் கௌரவத்தை மீட்டெடுக்க வேண்டும்,” என்று பாஸ் கொள்கைக்கு எதிராக பேசிவரும் அந்த முன்னாள் அமைச்சர் கூறினார்.
பக்காத்தான் ஹராப்பானின் 4 உறுப்புக் கட்சிகளுக்கும், தங்களின் புகழைச் சோதிக்கும் ஒரு களமாக சிலாங்கூர் மாநிலம் திகழ்கிறது. எதிர்வரும் பொதுத்தேர்தலில், சிலாங்கூரில், மும்முனையில் பாரிசானைச் சந்திக்கத் தயாரென பாஸ் பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், தங்களால் முடிந்த அளவு வேட்பாளர்களை அம்மாநிலத்தில் நிறுத்த வேண்டுமென அவர் அமானாவை வலியுறுத்தியுள்ளார்.
“பி.கே.ஆருடன் இணைந்திருக்க மாட்டோமென அமானா அறிவிக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை இழப்பதைவிட, தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைவது மேல்,” என்றும் அவர் கூறினார்.
அம்னோவுடன் நட்புறவாடியக் காரணத்தால், பாஸ் கட்சியின் தலைமையுடன் கருத்து வேறுபாடு கொண்ட தலைவர்களால் அமைக்கப்பட்ட அமானா கட்சியை, இதுநாள் வரை பிகேஆர் தலைவர்கள், ஒதுக்கியே வைத்துள்ளனர் என்று ஷைட் குற்றம் சாட்டினார்.
14-வது பொதுத் தேர்தலில், பாஸ் கட்சியை ஒரு பங்காளியாக ஏற்றுக்கொள்ளும் எண்ணத்தினால், பிகேஆர் தலைவர்கள், நீண்ட காலமாக அமானாவை அவமதித்து வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை, பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி, பாஸ் கட்சியுடனான அந்தப் பேச்சுவார்த்தையில் தான் தனித்து செயல்படுவதாகக் கூறுவதை மறுத்ததோடு, அது கட்சியின் ஒட்டுமொத்த முடிவு என்றும் கூறினார்.
சிலாங்கூரில், மும்முணை போட்டிக்குத் தயாராகும் தனது எண்ணத்தைப் பாஸ் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளும் நோக்கமும் அந்தப் பேச்சுவார்த்தைக்கு ஒரு காரணம். கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து, சிலாங்கூர் மாநிலம் பாஸ் மற்றும் ஜசெக கூட்டணியுடன் சிலாங்கூர் மாநிலத்தை பிகேஆர் வழிநடத்தி வருகிறது.
இம்முடிவை, செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் உட்பட சில பிகேஆர் தலைவர்களும் ஏற்றுக்கொள்லவில்லை.
பக்காத்தானில் பாஸ் கட்சியின் மாற்றாக அமானாவை ஆதரிக்கும் ஷைட், அண்மையில் பக்காத்தான் ஹராப்பானுக்கு பிரச்சாரம் செய்ய, அதன் தலைவர் டாக்டர் மகாதீருடன் கிளாந்தானுக்குச் சென்றிருந்தார்.
தனது டுவிட்டர் பதிவுகளில், இன்றிரவு நடக்கும் சந்திப்பில், கூட்டணியைப் பலவீனமாக்கும் எந்த முயற்சிக்கும் எதிராக தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டுமென பக்காத்தான் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி ‘மக்களைத் தியாகம் செய்யச் சொல்லி கேட்கும் முன், தியாகம் என்பதன் பொருளை கற்று கொள்ள வேண்டும்’ என்றும் அத்தலைவர்களுக்கு அவர் நினைவுறுத்தினார்.
“பிகேஆரை, பாஸ் கட்சியுடன் ‘விளையாட’ அனுமதித்து, மக்களின் நம்பிக்கையை அழிக்காதீர்கள்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.