மகாதீர் : பாரிசானைத் தோற்கடிக்க, நம் சொந்த நலன்களைத் தியாகம் செய்ய வேண்டும்

mahathir-31எதிர்வரும் பொதுத் தேர்தலில், தேசிய முன்னணியை வெல்ல விரும்பினால், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலன்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு, பக்காத்தான் ஹராப்பானின் தலைவர் டாக்டர் மகாதீர், அக்கூட்டணியின் உறுப்புக்கட்சிகளுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

“தியாகம் செய்வதோடு, நாம் நமது நண்பர்களையும் சகித்துக்கொள்ள வேண்டும். நமது கட்சி மட்டும் தனித்து நின்று, 13 உறுப்புக்கட்சிகள் கொண்ட அரசாங்கத்தைத் தோற்கடிக்க முடியாது.”

“எனவே, நாம் பிறரோடு ஒத்துழைக்க வேண்டும், அதாவது, மற்றவர்கள் அவர்களது உரிமைகளைப் பெற, நாம் நமது உரிமைகளைத் தியாகம் செய்ய வேண்டும்.”

“அதிகாரமும் உரிமையும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட, நாம் நமது சுயநலத்தைத் தியாகம் செய்ய வேண்டும்”, என நேற்றிரவு கோம்பாக்கில் நடந்த பெர்சத்து கட்சியின் நிதி திரட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு மகாதீர் பேசினார்.

சுமார் 600 பேர் கலந்துகொண்ட அந்நிகழ்வு, பெர்சத்து கட்சியின் முதல் நிதிதிரட்டு நிகழ்ச்சி என்பது குறிப்பிடதக்கது.

டாக்டர் மகாதிரின் இந்த அறை கூவல்,  தனது கட்சி உறுப்பினருக்கா அல்லது எதிர்க்கட்சி கூட்டணிக்காazmin-ali1 என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

எனினும், பிகேஆர்- பாஸ் உடனான பேச்சுவார்த்தைகளில் பக்காத்தான் கூட்டணிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி அறிவித்த ஒரு நாளுக்கு பின்னர் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்கள் பாஸ் உடனான ஒத்துழைப்பில் நம்பிக்கை இழந்துள்ள வேளையில், அஸ்மின் அலி மட்டும் அதில் இன்னும் வலுவான நம்பிக்கையுடன் உள்ளார்.

ஆரம்பத்தில், இதனை மகாதீர் ஆதரித்தாலும், எதிரணியினரின் முயற்சியைப் பலமுறை பாஸ் புறக்கணித்ததால், அவரும் அதனைக் கைவிட்டார்.