இந்தியா-சீனா எல்லையில் தகராறுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து தங்களுடைய படைகளை விரைந்து மீட்டுக்கொள்வதற்கு இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன என்று இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்தது.
இவ்விரு நாடுகளின் போர்வீரர்கள் இந்தியா, பூட்டான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகிலுள்ள டோக்லாம் பீடபூமியில் போரை எதிர்நோக்கி இருந்தனர்.
இந்த முடிவு அடுத்த ஞாயிற்றுக்கிழமை சீனாவில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் நாடுகளின் – பிரேஸில், ரஷ்யா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிவை உள்ளிட்ட, உச்சநிலை மாநாட்டிற்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப வாரங்களில் இந்தியாவும் சீனாவும் டோக்லாம் சம்பவம் குறித்து இராஜதந்திர தொடர்புகளை நிலைநிறுத்தி வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொண்டுள்ளன. அது இப்போது அமலாக்கம் கண்டுவருகிறது என்று வெளிவிவகார அமைச்சின் அறிக்கை கூறுகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்த மேல்விபரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.