பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கட்சியில் குழப்படி செய்வதற்குத் திட்டமிடுவதாக “பொய்யான குற்றச்சாட்டுகளை”ப் பரப்ப கட்சிக்குள்ளேயே “இரகசிய இயக்கம்” ஒன்று நடக்கிறாம்.
இதை ரபிசியே உறுதிப்படுத்தினார் என த ஸ்டார் ஆன்லைன் கூறுகிறது.
தமக்கு எதிராக பல கிறிமினல் குற்றச்சாட்டுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய ரபிசி, “என் விடுதலைக்காகவும் சிறைக்குப் போகாதிருப்பதற்காகவும் நான் (துணைப் பிரதமர்) டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடியிடம் விலைக்குப் போய்விட்டதாக பிகேஆரில் ஒரு சிறு கும்பல் என்மீது குற்றஞ்சாட்டி வருவதை நான் அறிவேன்”, என்றார்.
கட்சி சகாவான லத்திபா கோயா அப்படிக் குற்றஞ்சாட்டி வருகிறார் என்றாரவர். ஆனால், அதற்காக அவர் லத்திபாவின் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லத் தயாராக இல்லை.
ஒரு வழக்குரைஞரான லத்திபா கடந்த சில நாள்களாக முகநூலில் ரபிசியைக் குறைகூறி பதிவிட்டு வந்துள்ளார். அவர் கட்சியைக் குலைக்க முயல்கிறார் என்றும் அவர் அம்னோ கைக்கூலி என்றும் லத்திபா குற்றஞ்சாட்டினார். ஆனால், ரபிசியின் பெயரைக் குறிப்பிடவில்லை.
பிகேஆர் பாஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சு நடத்த முயல்வதை ரபிசி கண்டித்ததை அடுத்து தாக்குதல்கள் மேலும் மோசமடைந்தன.
நேற்றிரவு நடந்த பக்கத்தான் ஹராபான் கூட்டதில் அக்கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாஸுடன் ஒத்துழைக்கப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளது.
மூன்று மணிநேரக் கூட்டத்துக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், “14வது பொதுத் தேர்தலில் மும்முனை போட்டி நடக்கும் சாத்தியம் இருப்பதால் பக்கத்தான் ஹராபான் அதற்குத் தயாராக வியூகங்களை வகுத்து வருகிறது”, என்று கூறப்பட்டிருந்தது.
இன்று பிற்பகல் மூன்று மணிக்கு பிகேஆர் அரசியல் பிரிவின் கூட்டம் நடைபெறுகிறது. அதில்தான் பூகம்பம் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.