திருப்தி அளிக்கும் அளவிற்கு இந்தியர் பிரதிநிதித்துவம் ஹரப்பானுக்குத் தேவைப்படுகிறது, இராமசாமி

 

ramasamyஹரப்பானில் திருப்தி அளிக்கும் அளவிற்கு இந்தியர்களின் பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதிசெய்வதற்கு கூட்டணிக்கு வெளியில் இருப்பவர்களிடம் பேசுவதற்கு முன்பு ஹரப்பானின் பங்காளித்துவக் கட்சிகளில் இருக்கும் இந்தியத் தலைவர்களுடன் ஹரப்பான் தேசியத் தலைவர்கள் விவாதிப்பது நல்ல தொடக்கமாக இருக்கும் என்ற அம்பிகா சீனிவாசனின் கருத்துடன் தாம் ஒத்துப்போவதாக பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II பி. இராமசாமி கூறுகிறார்.

இந்தியர் பிரதிநிதித்துவம் பற்றிய கேள்வி எழும்போது ஹரப்பானில் தற்போதைய இந்தியப் பிரதிநிதித்துவம் திருப்தியளிப்பதாக இல்லை. எதிர்வரும் தேர்தலில் இந்தியர்கள் ஹரப்பானுக்கு ஆதரவாக வாக்களிக்கும் விருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று தாம் வலுவாக நம்புவதாக அவர் கூறுகிறார்.

ஹரப்பானில் தேசிய மற்றும் மாநில அளவில் திருப்தியான அளவிற்கு இந்தியப் பிரதிநிதித்துவம் இருப்பது ஹரப்பான் இந்தியர்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்ற எண்ணத்தை இந்தியர்களிடையே வளர்க்க உதவும் என்று இராமசாமி கருதுகிறார்.

பாரிசான் நேசனலுடன் இந்தியச் சமூகம் கொண்டிருந்த நீண்டகால உறவு, கசப்பானதும் துயராந்ததும் ஆகும். நாட்டின் நலத்திற்காக தங்களுடைய வியர்வையையும் இரத்தத்தையும் சிந்திய இந்தியர்களுக்கு இந்த உறவு பெற்றுத் தந்தது படுவேதனையும் ஏழ்மையும்தான் என்றார்.

ஹரப்பான் தேசியத் தலைமைத்துவம் இந்தியர்களுக்கு ஆற்றலுடைய பிரதிநிதித்துவம் அளிப்பதின் வழி அவர்களுக்கு அங்கீகாரமும் உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். மறந்துவிடாதீர்கள்: 2008 மற்றும் 2013 ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் இந்தியர்கள் பக்கத்தான் ரக்யாட்டிற்கு ஆதரவான பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினர். வரப்போகும் பொதுத் தேர்தலில் சில தேர்தல் தொகுதிகளில் வெற்றியாளர்களை படைக்கும் ஆற்றலுடையவர்களாக இந்தியர்கள் இருக்கக்கூடும்.

இந்தியர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும், அவர்கள் இந்தியர்கள் என்பதற்காக அல்ல. இந்நாட்டிற்கு இந்தியர்கள் அளித்த எல்லையற்ற பங்களிப்புக்காக அவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்று இராமசாமி மேலும் கூறினார்.

எண்ணிக்கையில், மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் குறைந்தவர்களாக இருக்கலாம், ஆனால் நாட்டிலுள்ள 60 தேர்தல் தொகுதிகளில் அவர்கள் ஓரளவு பெரிய எண்ணிக்கையில் இருப்பதால் முடிவுகள் வேறாக இருக்கலாம். இதை, பிஎன்னை பொதுத் தேர்தலில் தோற்கடிப்பதற்கு இந்தியர்களின் ஆதரவு தேவை என்று பேசுகையில், முன்னாள் பிரதமர் மகாதிரே ஒப்புக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஹரப்பான் பிஎன்னில் ஒரு வல்லமைமிக்க எதிரியை, செல்வமும் அதிகாரமும் கொண்ட ஒரு சக்தியை, எதிர்கொள்ளவிருக்கிறது. இதன் அடிப்படையில், திருப்தி அளிக்கும் பிரதிநிதித்துவம் பற்றிய கேள்வி குறித்து ஹரப்பான் கவனமாகச் சிந்திக்க வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பாகும் என்று கூறும் இராமசாமி, தாம் இந்தியப் பிரதிநிதித்துவம் பற்றி மட்டும் பேசவில்லை; இதர சமூகங்கள் மற்றும் இதர பிரிவுகள் ஆகியவற்றின் பிரதிநிதித்துவமும் சேர்க்கப்பட வேண்டும் என்பதோடு இதில் தீவகற்பம் மட்டுமின்றி சாபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களும் அடங்கும் என்றார்

பிஎன்னை எதிர்த்து நிற்க ஓர் அரசியல் கூட்டணி அமைப்பது மிகக் கடினமானதாகும். பலவகையான அரசியல் தத்துவங்களையும் வேறுபட்ட கருத்துகளைக் கொண்ட தலைவர்களையும் உள்ளடக்கிய அரசியல் கட்சிகளை ஒரு பொது நோக்கத்திற்காக ஒன்று சேர்ப்பது சுலபமல்ல. ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் நான்கு பங்காளித்துவக் கட்சிகள் ஒன்றுசேர்ந்து மாற்று அரசியல் பிரதிநிதித்துவம் சாத்தியமான ஒன்றே என்று மலேசியர்களுக்கு வழிகாட்ட வந்திருப்பதாக இராமசாமி கருதுகிறார்.

“ஆனால், தாங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஓர் அங்கமாக இல்லாமல் ஒதுக்கப்பட்டு விட்டோம் என்று நாட்டிலுள்ள ஒரு சில தரப்பினரும் சமூகங்களும் மனம் நொந்த நிலை இருக்கையில், ஹரப்பானை அமைத்து அதை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட நீண்ட பயணம் முற்றுப்பெற்றதாகாது”, என்று வலியுறுத்துகிறார் இராமசாமி.