பீட்டர் வேலப்பனுக்கு வயது 82. இந்த வயதிலும் கால்பந்து பேச்சை எடுத்துவிட்டால் துள்ளிக்குதிக்கும் இளைஞராகி விடுகிறார். முகமெல்லாம் பூரித்து விடுகிறது.
ஏன் பூரிக்காது? வாழ்நாளைக் கால்பந்தாட்டத்துக்கே அர்ப்பணித்தவர், 12 பிபா உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்பாடு செய்வதில் பங்குகொண்டவர், 230 நாடுகளில் கால்பந்தாட்டப் போட்டிகளை மேற்பார்வை செய்பவர். பிறகு ஏன், பூரித்துப் போக மாட்டார்?
1950 இலிருந்து அவருக்குக் கிடைத்த பாராட்டுச் சான்றிதழ்கள், பதக்கங்கள், கேடயங்கள், அவரது பணியை அங்கீகரிக்கும் கடிதங்கள், டியாகோ மராடோனா போன்ற கால்பந்தாட்ட நட்சத்திரங்களுடன் அவர் எடுத்துக்கொண்ட படங்கள் என அவரது வீடும் அலுவலகமும் நிறைந்திருக்கிறது.
“எங்களுடன் பேசப் பிடிக்கவில்லை என்றால் அவற்றுக்குள் புகுந்து ஒளிந்து கொள்வார்”, என வேடிக்கையாகக் குறிப்பிட்டார் அந்தப் பக்கமாக வந்த அவரின் மனைவி.
1972-இல், தென் கொரியாவை வென்று ஜெர்மனியின் ஒலிம்பிக் போட்டிக்குச் சென்ற மலேசியக் குழுவின் நிர்வாகியாக இருந்தவர் பீட்டர் வேலப்பன்தான்.
“ஜெர்மன் கால்பந்துச் சங்கம் என்னை அழைத்து ஒலிம்பிக்சின் தொடக்க ஆட்டத்தில் மலேசியா ஜெர்மனிக்கு எதிராக ஆடும் என்று கூறியதும் என்னால் நம்பவே முடியவில்லை.
“நான் உடனே (அப்போது சிலாங்கூர் மந்திரி புசாராக இருந்த) ஹருன் இட்ரிசை அழைத்து ‘ஜெர்மனி மலேசியாவோடு விளையாடப் போகிறது. ஒலிம்பிக்சை உலகமே பார்க்கப்போகிறது’ என்றேன்.
“அதற்கு அவர், ‘உனக்கென்ன பைத்தியமா’ என்று கேட்டார். அவராலும் நம்ப முடியவில்லை. அதன்பிறகு சென்றோம். ஆடினோம்”, என்று பீட்டர் வேலப்பன் அவரது வீட்டில் ‘அந்த நாள்களை’ மலேசியாகினியிடம் நினைவு கூர்ந்தார்.
சிறுவயது முதலே வேலப்பனுக்குக் கால்பந்து என்றால் அவ்வளவு ஈடுபாடு.
நெகிரி செம்பிலான், சிலியாவில் தன் தோட்டத்துத் திடலில் மணிக்கணக்கான பந்தை உதைத்து விளையாடிக்கொண்டிருப்பார்.
மற்ற விளையாட்டுகளிலும் ஈடுபட்டதுண்டு. மாநிலத்தைப் பிரதிநிதித்து பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
கெனடாவில் கல்வித் துறையில் பட்டம் பெற்ற வேலப்பன், 17 ஆண்டுகள் இளைஞர், கலாச்சாரம், விளையாட்டுத் துறை அமைச்சில் பணி புரிந்தார். அங்குதான் மலேசியாவின் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானை நேரில் பார்க்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
“துங்குவை 1958-இல் முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போது நான் மலேசிய கால்பந்துச் சங்க உதவிச் செயலாளர்.
“ஒரு தந்தைபோல் நடந்து கொண்டார். மிகவும் அடக்கமாக இருந்தார். மரியாதை கொடுத்தார். இதெல்லாம் என்னை மிகவும் கவர்ந்தன”.
மலேசியாவின் முதலாவது பிரதமர் குறித்து மலேசியர் பலரும் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் தொகுப்பு நூல் “Dialog: Thoughts on Tunku’s Timeless Thinking” என்ற பெயரில் உருவாகியுள்ளது. அதில் வேலப்பன் துங்கு குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
துங்கு குறித்துப் பேசுவதற்கு வேலப்பன் சலிப்பதே இல்லை. அவரிடம் இன்றைய மலேசிய கால்பந்து குறித்துக் கேட்டால் தலை தொங்கி விடுகிறது.
கால்பந்து பற்றிப் பேசவே வருத்தப்படுகிறார். “என் பேச்சு, மூச்சு எல்லாமே கால்பந்துதான். என் வாழ்க்கையே கால்பந்துக்குத்தான். அது நன்றாகத்தான் வளர்ந்து வந்தது.
“இந்த நாடு இன ரீதியில் ஒன்றுபட்டிருக்க கால்பந்துதான் மிகவும் உதவும் என்பதுதான் என் ஆழமான நம்பிக்கை. இதைப் போல் மலேசியர்களை ஒன்றுபடுத்தும் விளையாட்டு வேறு எதுவுமில்லை.
“எப்ஏம் தலைவர் விளையாட்டில் அரசியல் வேண்டாம் என்கிறார். ஆனால், அது நடக்காது. ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமின் முயற்சிகள் பலனளிக்கும் என்று நான் நம்பவில்லை. எல்லா நிலைகளிலும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
“எல்லாரும் அம்னோ ஆள்கள்தான். சீனர்கள், இந்தியர்கள் இல்லை. இது எல்லாவற்றையும் மாற்றி அமைக்க அவரால் முடியுமா என்று தெரியவில்லை. எல்லா இனங்களையும் உள்ளடக்கும் உண்மையான 1மலேசியா கால்பந்துக் குழுவை உருவாக்கும் சவால்மிக்க பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
“இன்றைய மலேசிய தேசியக் குழுவைப் பாருங்கள். சீனர்கள் இப்போது விளையாடுவதில்லை. இந்தியர் எண்ணிக்கையும் குறைவு.
“இன்றைய நம் கால்பந்து நிலவரம் என்னவென்றால் அடித்தளமில்லாமல் வெறுமனே கூரைகளைத்தான் கட்டிக்கொண்டிருக்கிறோம் . ஒரு வீடு கட்டுவதாக இருந்தால் முதலில் அடித்தளம் இடுவோம். இளைஞர் முன்னேற்றத்துக்கு மன்றங்கள் தேவை. அப்படிப்பட்ட மன்றங்கள் இப்போது இல்லை.
“நாம் என்ன செய்கிறோம். முதலில் கூரையைக் கட்டுகிறோம்- தேசிய கால்பந்துக் குழுவை. அது விழுந்தால் என்ன ஆகும்?
“மலேசியாவில் திறன்கள் நிறைய உண்டு. அதற்குச் சரியான வழியில் இட்டுச் செல்லத்தான் தலைமை இல்லை”, என பீட்டர் வேலப்பன் கூறினார்.
பிறகு வேலப்பன் மீண்டும் துங்குவின் நினைவுகளுக்குச் சென்றார். எத்தனையோ வேலைகளுக்கிடையிலும் துங்கு ஆசிய கால்பந்துச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டத்தைக் கூட்டத் தவறியதே இல்லை என்றாரவர்.
ஆசிய கால்பந்து முன்னேற்றத்துக்கு மிகவும் பாடுபட்டவர் துங்கு. மலேசியாவின் மெர்டேகா கால்பந்துப் போட்டியைத் தொடங்கியவர் அவர். 1957 தொடங்கி 39 ஆண்டுகள் அப்போட்டி நடைபெற்றது. பல அனைத்துலகக் குழுக்கள் அதில் கலந்துகொண்டன. அது போக 16வயதுக்குக் குறைந்தவர்களுக்கான ஆட்டங்கள், 20வயதுக்குக் குறைந்தவானவர்களுக்கான ஆட்டங்கள் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்தார்.
மனிதாபிமானம் மிக்கவர் துங்கு. மெர்டேகா அரங்கம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு சென்றார் துங்கு.
அப்போது ஒரு பிச்சைக்காரர் அவரை அணுகி “ஒரு வாரமாக நான் சாப்பிடவில்லை”, என்றார். துங்கு 10 ரிங்கிட்டை அவருக்குக் கொடுத்தார். அப்பிச்சைக்காரர், “என்னிடம் போட்டுக்கொள்ள சட்டைகூட இல்லை”, என்றார். துங்கு அவரது கோட்டைக் கழட்டி சட்டையை அவிழ்க்க முனைந்தார். பிச்சைக்காரர் அரண்டு போய் ஓடி விட்டார்.
துங்கு இறைவன் மலேசியாவுக்கு அளித்த வரம். அவரின்றி மலேசியா இன்று இந்த நிலையை எட்டியிருக்க முடியாது என்றார் வேலப்பன்.
“என்னுடைய பணி நிமித்தம் நான் சுமார் 230 நாடுகளுக்குச் சென்றுள்ளேன். மலேசியா போன்ற நாட்டைக் கண்டதில்லை. நம்மிடம் இயற்கை வளமிருக்கிறது. மனித வளம் இருக்கிறது. இரண்டும் சேர்ந்துதான் இன்றைய மலேசியா.
“எனினும், அரசியல்வாதிகள் இதை மதிப்பதில்லை. தேவையில்லாமல் இனம், சமயம் பற்றிப் பேசுகிறார்கள். எல்லாருமே இந்நாட்டுக்குப் பங்காற்றியுள்ளனர். அதனால்தான் நாடு முன்னேறி நாம் வளமாக இருக்கிறோம்”, என்றாரவர்.
அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட துங்குவுக்கே ஆப்பு வைத்தவன்தான் அஞ்சடி மகாதீர் !
அரசியல் வாதிகளினால்தான் மலேசியாவின் புகழ் மங்கிவருகிறது.
உயர்நிலை பண்பு இல்லாத அதிகாரிகள், அரசியல்வாதிகள் , ஆங்கிலமொழி புறக்கணிப்பு, சீனம் தமிழ் புறக்கணிப்பு, இனம் புறக்கணிப்பு, இலஞ்சம் ஊடுருவல், ஒரு இனம் இலஞ்சம் இல்லாமல் வாழ இயலாத சூழ்நிலை, அதனால் பணம் படைத்தவர்கள் எதுவேண்டும் என்றாலும் செய்யலாம் , தவற்றை மூடி மறைக்கலாம் என்ற எண்ணம் , அதற்கு துணை போகும் அதிகாரிகள் , அடித்தளம் இல்லாத கல்வி தரமும் இன்னும் பல நம் நாடு பின் நோக்கி செல்வதற்கான காரணங்களாகும் . இதனை மனதில் நிறுத்தி நாடு மேம்பட மலேசியர்களான நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் .
”என்னுடைய 17 வருட அரசியல் உழைப்பையும், செல்வாக்கையும்
ஒரே ஒரு கடிதம் மூலம் மகாதீர் கெடுத்துப்போட்டார்” என்று
நமது முதலாம் பிரதமரும்,சுதந்திரத்தந்தையுமான துங்கு அப்துல்
ரகுமானை கண்கலங்கவைதவர்தான் இந்த மகாதீர்! 1969ஆம்
ஆண்டு மே 13 கலவரதுக்குப்பிறகு, 17-6-1969ஆம் தேதி மகாதீரால்
எழுதப்பட்ட அந்தக்கடிதத்தில் “ சீனர் மற்றும் இந்திய சமூகமும்
காட்டுமிராண்டித்தனமாக ( கடிதத்தில் மலாய் மொழியில் KURANG
AJAR) நடந்துகொண்டதற்கு முழு முதற்காரணம் துங்குவின்
முட்டால்தனமான விட்டுக்கொடுக்கும் கொள்கையே காரணம்
(LANGKAH BERTOLAK ANSOR) ”என்று குறிப்பிட்டுஇருந்தார்.
மகாதீரின் இன்னும் பல பலமான குற்றச்சாட்டுகளை கொண்ட
அந்தக்கடிதத்தால் துங்குவின் சகல மேன்மைகளையும்,
கவுரவத்தையும் இழந்து மலாய் சமூகத்தின் பார்வைக்கு ஒரு
கேலிப்பொருளானார்.இன்று இவரைத்தான் நமது மான்புமிகு
எதிர்கட்சி இந்திய அரசியல்வாதிகள் மகாதீரை தோளில் குந்த
வைத்து கூத்தாடுகிறார்கள். அவர் திருந்திவிட்டாராம். பகலிலே
பசு மாடு கண்ணுக்கு தெரியாத மகாதீருக்கு,இரவிலே எருமை
மாடு தெறிகிறதாம் !! அட போங்கையா…….!!!
ஐயா T .Sivalingam @Siva அவர்களே நீங்கள் கூறுவது நடக்குமா? நடந்தால் நல்லதே.
அருமையான கட்டுரை நம் நாட்டின் மேம்பாட்டுக்கு இன்றி நமது நாட்டின் விளையாட்டு துறைக்கும் நம் இந்தியர்களின் பங்களிப்பு அளப்பரியது என்பதை இந்த கட்டுரை மெய்ப்பிக்கிறது ! நமது நாட்டின் காற்பந்து குழுவை தலைமை ஏற்று திறம்பட நிர்வகித்த கேப்டன் எம். சந்திரனையும் மறந்து விட முடியாது ! இதை போன்ற நம்மவர்களின் புகழ் மிக்க கட்டுரைகளையும் அதிகம் வெளியிடுங்கள் ! நமது இளைய சமுதாயத்திற்கு ஊன்றுகோலாக அமைய உறுதுணையாக இருக்கும் ! ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை , ஆணைகள் இட்டு யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை ! நமது புகழும் நம் நாட்டில் அப்படித்தான் ! ” நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை ” 60 ஆண்டுகள் நமது சமுதாயத்தில் ! நாட்டுக்காக உம் !சமுதாயத்திர்காகவும் சிறந்த முறையில் சேவை ஆட்ரியவர்களை ! ” who is who malaysian indians ” என்ற புத்தக வெளியீடு செய்தாள் மலேசிய இந்தியர்களின் வரலாறு என்றென்றும் காக்க படும் .