எதிர்வரும் பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) கைவசமிருக்கும் ஒரே ஒரு நாற்காலியைக் கைப்பற்ற, பக்காத்தான் ஹராப்பான் களமிறங்குமெனப் பேராக் மாநில ஜனநாயகச் செயற்கட்சியின் தலைவர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
“ஹராப்பான் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தில் போட்டியிடும், அம்னோ-பாரிசானுக்குப் பதிலாக, சுங்கை சிப்புட் தொகுதி மக்கள் சிறந்த தேர்வைச் செய்ய இது அவர்களுக்கு வாய்ப்பளிக்கும்,” என்றார் அவர்.
அவர்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தாமல், டிஏபி-யின் தொகுதிகளில் பி.எஸ்.எம். போட்டியிடப்போவதாக அறிவித்ததை அடுத்து, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஹராப்பானுடன் ஒத்துழைப்பதில் பி.எஸ்.எம். உண்மையாக இல்லை, எதிர்க்கட்சியின் ஓட்டுகளைப் பிரிப்பதே அவர்கள் எண்ணமென்பதை, அவர்களின் இந்த அறிவிப்பு நிரூபிக்கிறது என ங்கா தெரிவித்தார்.
“அம்னோ-பாரிசான்தான் தங்களின் முகான்மை எதிரியென, பி.எஸ்.எம். நினைத்தால், அம்னோ கைவசமிருக்கும் தொகுதிகளில்தான் அவர்கள் போட்டியிட வேண்டும். ஆனால், இந்த இடதுசாரி கட்சி எதிர்கட்சிகளின், குறிப்பாக டிஏபி-யின் நாற்காலிகளையேக் குறிவைக்கிறது. ஆக, அவர்களின் உண்மையான நிலைப்பாடு என்னவென்று தெளிவாகத் தெரிகிறது,” என அவர் மேலும் கூறினார்.
பாரிசானுக்கு மாற்று ஹராப்பான் மட்டுமே என ங்கா வலியுறுத்தினார்.
“ஹராப்பானுடன் ஒத்துழைக்காத எந்தவொரு மூன்றாவது அணியும், நஜிப்பைக் காப்பாற்ற பாரிசானை ஆதரிப்பதாகவே அர்த்தம்,” என்றார் அவர்.
கடந்த இரண்டு தவணையாக, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் இருக்கிறார். 12 மற்றும் 13-வது பொதுத் தேர்தல்களில் பிகேஆர் சின்னத்தில் அவர் போட்டியிட்டார்.
முன்னதாக அத்தொகுதி, ம.இ.கா. தேசியத் தலைவர் ச.சாமிவேலுவின் கோட்டையாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.