டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பல இன விருந்து மீதான தனது மௌனத்தை ஹரப்பான் கம்யூனிட்டி என்ற சமூக சேவை அமைப்பு கலைத்துள்ளது.
கடந்த வாரம் அந்த விருந்து நிகழ்வை ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறை சோதனை செய்த பின்னர் அது குறித்த சர்ச்சை அதிகரித்துள்ளது.
30 ஜயிஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்யும் முன்னர் அந்த ‘நன்றி தெரிவிக்கும்’ விருந்து நிகழ்வில் “ஹரப்பான் கம்யூனிட்டியின் நன்கொடையாளர்களும் நண்பர்களும் பயனடைந்தவர்களும்” கலந்து கொண்டதாக அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரேமண்ட் கோ கூறினார்.
“எங்களிடமிருந்தோ அல்லது டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாக உரிமையாளர்களிடமிருந்தோ அனுமதி பெறாமல் அவர்கள் மண்டபத்துக்குள் சென்றனர். அவர்கள் படம் எடுத்தனர். வீடியோ ஒளிப்பதிவுகளையும் செய்தார்கள். அந்த மண்டபத்தில் இருந்த அலமாரிகளிலிருந்தும் மேசைகளிலிருந்தும் துண்டுப் பிரசுரங்களை அகற்றினர்.”
ஏழ்மையில் உள்ள, கீழ் நிலையில் உள்ள, எச்ஐவி/ஏய்ட்ஸ் நோயுடன் வாழும் மக்கள் ஆகியோருடன் இணைந்து வேலை செய்யும் அமைப்பு ஹரப்பான் கம்யூனிட்டி என அவர் சொன்னார்.
இதனிடையே ஏழ்மையில் உள்ள ஒரங்கட்டப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை வழங்கும் ஹரப்பான் கம்யூனிட்டி போன்ற ஆதாய நோக்கமில்லாத நிறுவனங்கள் நாட்டில் இயங்குவது குறித்து மலேசியா பெருமைப்பட வேண்டும் என அந்த அமைப்பின் வழக்குரைஞரான அன்னு சேவியர் கூறியிருக்கிறார்.
இருந்தும் மதமாற்றம் நிகழ்கிறது என்று எண்ணிக் கொண்டு நன்றி தெரிவிக்கும் அறநிதி விருந்தில் சோதனை நடத்துவதற்கு ஜயிஸ் முடிவு செய்ததாக அவர் சொன்னார்.
உதவி தேவைப்படும் சிரமத்தை எதிர்நோக்கும் மக்களுக்கு ஹரப்பான் கம்யூனிட்டி இன, சமய, வம்சாவளி வேறுபாடின்றி உதவி செய்து வருகிறது. அவ்வாறு இருந்தும் அந்த அமைதியான ஒற்றுமையான அற நிதி நிகழ்வை குலைப்பதற்கு ஜயிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன் ஹரப்பான் கம்யூனிட்டி உண்மையில் ஒரே மலேசியா அமைப்பாகும். அதன் வாரியத்தில் மலாய்க்காரரான முகமட் ரஹிம் இத்னின், சீனரான ரேமண்ட் கோ, இந்தியரான ஸ்ரீராம் கே எஸ் கோபால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒரே மலேசியாவை வெறும் சுலோகமாக மட்டும் கருதி அதனை உச்சரித்துக் கொண்டு மட்டும் இருக்கும் சில தரப்புக்களைப் போல் அல்லாது அந்த அமைப்பு இன, சமய வம்சாவளி வேறுபாடின்றி எல்லோருக்கும் உதவி செய்கிறது.
அமைதியை விரும்பும் மலேசியர்களுக்கு அதிர்ச்சியையும் தேவையில்லாத அச்சத்தையும் ஏற்படுத்திய அத்தகைய ஆணை இல்லாத சோதனைகள் இனிமேல் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.