மூன்றில் இரண்டு பெரும்பான்மை கேட்கும் நஜிப் “நம்பத்தகாத பிரதமர்”, நாடாளுமன்ற உறுப்பினர் தியோ கூறுகிறார்

 

Najibuntrustworthyஒருதலைப்பட்ச சிறார் மதமாற்றத்திற்கு முடிவுகட்ட பெண்களிடம் பிஎன்னுக்கு மூன்றில் இரண்டு நாடாளுமன்ற பெரும்பான்மை கோரும் பிரதமர் நஜிப் ஒரு “நம்பத்தகாத பிரதமர்” என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் அவரை வர்ணித்தார்.

கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரான தியோ இன்று வெளியிட்ட அறிக்கையில் மக்கள் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவைக் காண கடந்த எட்டு ஆண்டுகளாகக் காத்துக் கொண்ட்டிருந்தனர். ஆனால், பயன் ஏதுமில்லை என்று கூறினார்.

ஏப்ரல் 2009 இல், அன்றைய சட்ட அமைச்சர் நஸ்ரி அசிஸ் மத மாற்றத்தில் சம்பந்தப்பட்ட தம்பதிகளின் குழந்தை பெற்றோர்கள் அவர்களின் திருமணத்தின் போது பின்பற்றிய மதத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும். அதற்கான உத்தரவை அமைச்சரவை பிறப்பித்துள்ளது என்று கூறியிருந்ததை தியோ குறிப்பிட்டார்.

மக்கள் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் காத்திருந்த பின்னர் திருமணம் மற்றும் திருமண விலக்கு சட்டத்திற்கு (எல்ஆர்எ) திருத்தம், செக்சன் 88A நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக நவம்பர் 21, 2016 இல் தாக்கல் செய்யப்பட்டது என்று கூறிய தியோ, அந்த மசோதாவின் இரண்டாவது வாசிப்பை இருமுறை தள்ளிப்போடப்பட்ட பின்னர், 2017 இல் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் அந்த மசோதா, சட்டத் திருத்தம் 88A நீக்கப்பட்டு, சட்டமாக்கப்பட்டது என்றார்.

செக்சன் 88A சட்டமாக்கப்படுவதற்கு அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பது உண்மையான பிரச்சனையாக இருந்தால், அதனை அரசாங்கம் ஏன் முன்னதாக அறிந்திருக்கவில்லை என்று வினவிய தியோ, அமைச்சரவையும் சட்டத்துறை தலைவரும் (ஏஜி) தூங்கிக்கொண்டிருந்தனரா என்று அவர் மேலும் வினவினார்.

நேற்று, ஒரு டிஎன்50 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பெண்களிடம் பேசிய நஜிப், செக்சன் 88A சட்டமாக்கப்படுவதற்கு அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகிறது என்று கூறினார்.

எதிரணி ஆதரவு தெரிவித்தும் ஏன் காத்திருக்க வேண்டும்?

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற நஜிப் ஏன் 14வது பொதுத் தேர்தல் வரையில் காத்திருக்க வேண்டும் என்று தியோ வினவினார்.

செக்சன் 88A சட்டமாக்கப்படுவதற்கு 36 டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டனர். பிகேஆர் மற்றும் அமனா உறுப்பினர்களும் அவ்வாறு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று தியோ விளக்கம் அளித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன ஆகும்? மக்கள் இன்னும் எத்தனை ஐந்து ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும் என்று அவர் மேலும் வினவினார்.

ஒருதலைப்பட்ச சிறார் மத மாற்றத்தை முடிவுக்கு கொண்டுவர நஜிப் மனமார விரும்புகிறார் என்றால், அக்டோபரில் தொடங்கும் நாடாளுமன்ற அமர்வில் அந்த சட்டத் திருத்தத்தை அவர் தாக்கல் செய்ய வேண்டும் என்று தியோ மேலும் கூறினார்.